ஜனாதிபதியின் முடிவுக்கு முஸ்லிங்களின் சார்பில் நன்றிகள் : முஷாரப் முதுநபீன் எம்.பியின் விசேட அறிக்கை !! - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

ஜனாதிபதியின் முடிவுக்கு முஸ்லிங்களின் சார்பில் நன்றிகள் : முஷாரப் முதுநபீன் எம்.பியின் விசேட அறிக்கை !!

(நூருல் ஹுதா உமர்)

முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து எங்களின் பல்வேறுபட்ட வேண்டுகோள்களையும் ஏற்றுக்கொண்டு கோவிட்-19 தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்த முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முன்வந்த அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களின் எண்ணத்தை கௌரவத்துடன் பாராட்டி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி முஷாரப் முதுநபீன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள் ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் கொண்டுள்ள முஸ்லிங்களுக்கு சாதகமான எண்ணம் தொடர்பில் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் அவ்வறிக்கையில், கோவிட்-19 தொற்றுக்கு இலக்காகி இதுவரை 36 பேர் இலங்கையில் மரணித்து இருந்தாலும் அதில் அரைவாசி பேர் முஸ்லிங்களாக இருந்தனர். அவர்களின் ஜனாஸாக்கள் கோவிட்-19 அச்சம் காரணமாக எரிக்கப்பட்டதால் முஸ்லிம்கள் மிகப்பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். இது தொடர்பில் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், இலங்கையின் முக்கிய பல சிவில் அமைப்புகளும் பல்வேறு வகையான அழுத்தங்களையும், ஆலோசனைகளையும் வேண்டுகோள்களையும் அரசுக்கு முன்வைத்து வந்தார்கள்.

முஸ்லிங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சர்வதேச நியதிகளின் அடிப்படையில் சுகாதார தரப்பினருடனும் பலதரப்பட்ட ஆலோசனைகளையும் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதன் மூலம் கோவிட்-19 பரவுமா எனும் துறைசார் நிபுணர்களின் அச்சத்தை போக்கி இவ்வாறான ஒரு சாதகமான முடிவை எடுத்த ஜனாதிபதி, அமைச்சர்கள், சுகாதார தரப்பினருக்கு முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் இது தொடர்பில் கரிசணையுடன் செயலாற்றிய சகல நல்லுள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment