பேலியகொட மீன் சந்தையில் இணைய வழி பணப் பரிமாற்றம் - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

பேலியகொட மீன் சந்தையில் இணைய வழி பணப் பரிமாற்றம் - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு

பேலியகொடை மீன் சந்தையில் பணப் பரிமாற்றங்களை இணைய வழியூடாக (ஒன்லைன்) மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன், உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, குறித்த விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

கடற்றொழில்சார் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வந்து, நாடாளாவிய ரீதியில் தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் கிடைப்பதற்கான சூழலை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

அந்த வகையில், பேலியகொடை மீன் சந்தையின் வியாபார நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கின்ற முயற்சியின் முதற்கட்டமாக மொத்த வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கொரோனா பரவுகின்ற வழிகளில் ஒன்றாக பணத்தாள் பரிமாற்றங்களும் அமைவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்த மீன் வியாபார நடவடிக்கையின்போது, பணத்தாள் பரிமாற்றத்திற்கு பதிலாக இணையவழி பணப் பரிமாற்றத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கை வங்கி அதிகாரிகளுடன் ஆராயப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதேபோன்று, கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் கடலுணுவு ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகள், தாங்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன், அவற்றிற்கு தீர்வுகளை வழங்கும் பட்சத்தில் கணிசமானளவு அந்நியச் செலாவணியை நாட்டிற்கு பெற்றுத்தருவதற்கு பங்களிப்பு செய்ய முடியும் என்ற உத்தரவாத்தினை வெளிப்படுத்தினர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி, உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்களுக்கும், கடலுணவு ஏற்றுமதியாளர்களுக்கும் நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்

No comments:

Post a Comment

Post Bottom Ad