சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்கிளே தெரிவு செய்யப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முதலாவது தனிப்பட்ட தலைவராக இருந்த இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகரனின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து இடைக்கால தலைவராக இம்ரான் கவாஜா இருந்து வந்தார்.
ஐ.சி.சி. புதிய தலைவர் தேர்தல் குறித்து பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டாலும் ஒருமித்த முடிவு எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடந்த ஒக்டோபர் 18ம் திகதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் கிரிக்கெட் சங்க தலைவரும், இடைக்கால தலைவராக இருந்த இம்ரான் கவாஜா, நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் இயக்குனர் கிரேக் பார்கிளே ஆகியோர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
ஐ.சி.சி.யின் 16 உறுப்பினர்கள் (டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 நாடுகள், 3 அசோசியேட் உறுப்பு நாடுகள், தனிப்பட்ட ஒரு பெண் இயக்குனர்) வாக்களிக்க உரிமை படைத்தவர்கள். அதில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெறுபவர்தான் புதிய தலைவராக தேர்வாக முடியும்.
மின்னணு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் சுற்றில் கிரேக் பார்கிளே 10 வாக்குகளும், இம்ரான் கவாஜா 6 வாக்குகளும் பெற்றனர்.
தனிப்பெரும் வாக்கு கிடைக்காததால் நடத்தப்பட்ட 2வது சுற்று வாக்கெடுப்பில் கிரேக் பார்கிளே 11 வாக்குகளையும், இம்ரான் கவாஜா 5 வாக்குகளையும் தன்வசப்படுத்தினார்கள்.
இதையடுத்து ஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தைச் சேர்ந்த சட்டத்தரணியான கிரேக் பார்கிளே தேர்வானார். அவர் 2012ம் ஆண்டு முதல் நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் இயக்குனராக உள்ளார்.
No comments:
Post a Comment