தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதி, பிரதமரால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் - வடிவேல் சுரேஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதி, பிரதமரால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் - வடிவேல் சுரேஸ்

(க.பிரசன்னா) 

2020 ஜனவரி மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதனம் வழங்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1000 ரூபா வழங்கப்படுமென பிரதமர் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்து தொழிலாளர்களை ஏமாற்றியிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், தற்போது கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் 750 ரூபாவினை வேதனமாக பெறுகின்றனர். மேலதிகமாக பறிக்கும் கொழுந்துக்கு 40 ரூபா வழங்கப்படுகின்றது. அதேபோல இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கின்றது. 

எனவே பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபாவையே வழங்க வேண்டும். மொத்த சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கு முனையக்கூடாது.

கூட்டு ஒப்பந்தத்துக்கும் இவ்விடயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் வழங்க வேண்டுமென நிதியமைச்சை கோருகின்றோம்.

தோட்டங்களை முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து அரசாங்கம் குத்தகைக்கு பெற்றுள்ளதா அல்லது அரசாங்கத்திடமிருந்து தோட்ட கம்பனிகள் பெற்றுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 

தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே காலத்துக்கு மிகவும் பொருத்தமான முறையாகும். குறைந்தது 5 ஏக்கர் அளவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு இம்முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 

இதன் மூலம் தேயிலை தொழில் துறையும் பாதுகாக்கப்படும் தொழிலாளர்களின் கௌரவமும் பாதுகாக்கப்படும். இந்த 5 ஏக்கர் காணியினை அரசாங்கமே மக்களுக்கு வழங்க வேண்டும். கம்பனிகள் மூலம் வழங்கப்படக் கூடாது.

வெளியார் உற்பத்தி முறைமைக்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாகவே மாற்ற வேண்டும். அதேவேளை வேதனத்தை அதிகரிப்பதன் மூலம் தொழிலாளர்களின் மீது வௌ்வேறு வகையில் அழுத்தங்களை திணிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தற்போது பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அவற்றை கைத்தொழில் பேட்டைகளாக மாற்றியமைத்து பெருந்தோட்டத் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை.

எனவே வரவு செலவுத் திட்ட உரையில் முன்மொழிவதை மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல் அதனை செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் கூறப்பட்ட இக்கூற்றை நாங்கள் சட்டபூர்வமானதாக எண்ணி நம்புகின்றோம். மக்களுக்கு நியாயமான விடயங்கள் வரும்போது எதிர்க்கட்சி என்ற வகையில் அதனை நாம் ஆதரிப்போம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment