தனி மனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை - News View

Breaking

Post Top Ad

Saturday, November 28, 2020

தனி மனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை

“கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனி மனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை சுகாதாரத் துறையினருக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்”

இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்த ஒருவர் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காததுடன், சுய தனிமைப்படுத்தலையும் கடைபிடிக்காது மாவட்டத்தில் உள்ள பல நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் போன்ற தனியார் வீடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.

பின்னர் அவரைப் பற்றிய தகவல் சுகாதார திணைக்களத்தினருக்கு கிடைத்ததைத் தொடர்ந்து இவர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினரால் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது.

அதனால் இவர் சென்று வந்த அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு தனி மனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வட மாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணி நேர அவசர அழைப்பிலுள்ள 021 2226666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விவரங்களை அறியத்தர வேண்டும்.

இதன்மூலம் தங்களையும் சமூகத்தையும் கோரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும். இந்நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவும். என்றுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad