புதிய பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்ன ஜனாதிபதியால் பரிந்துரை - நாளை இறுதி முடிவை அறிவிக்கவுள்ள பாராளுமன்ற பேரவை - News View

Breaking

Post Top Ad

Sunday, November 22, 2020

புதிய பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்ன ஜனாதிபதியால் பரிந்துரை - நாளை இறுதி முடிவை அறிவிக்கவுள்ள பாராளுமன்ற பேரவை

(எம்.எப்.எம்.பஸீர்) 

சுமார் ஒன்றரை வருடங்களாக வெற்றிடமாக உள்ள பொலிஸ்மா அதிபர் பதவிக்கு, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற பேரவைக்கு ஜனாதிபதி சி.டி. விக்ரமரத்னவின் பெயரை பரிந்துரைத்துள்ள நிலையில், அது தொடர்பிலான தீர்மானம் எடுக்க நாளை 23 ஆம் திகதி பாராளுமன்ற பேரவை கூடவுள்ளதாகவும், அதன் அனுமதியின் பின்னர் இவ்வாரத்திலேயே பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படவுள்ளதாகவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.

இதுவரை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாராளுமன்ற பேரவைக்கு அனுப்பிய அனைத்து நியமன பரிந்துரைகளும் எந்த மாற்றங்களும் இன்றி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் பதவிக்கு அவர் பரிந்துரைத்துள்ள பதில் பொலிஸ்மா அதிபரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பெயரும் ஏற்றுக் கொள்ளப்படும் என நம்பப்படுகின்றது.

பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் முதல் நிலையில் சி.டி. விக்ரமரத்னவே தற்போது உள்ள நிலையிலேயே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் ஏற்கனவே, தான், நாட்டுப்பற்றையும் தகைமையாக கருதியே அனைத்து நியமனங்கள் தொடர்பிலும் பரிந்துரைகளை முன் வைப்பதாகவும், தனது நியமனங்களை மாற்றுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராக மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்ட போது முன்வைக்கப்பட்ட எதிர்ப்புக்களை மையப்படுத்தி, தேர்தலின் போது தனக்கு ஆதரவளித்த தேசிய அமைப்புக்களுக்கு ஜனாதிபதி அந்த பதிலை அளித்திருந்தார்.

இவ்வாறான பின்னனியிலேயே சி.டி. விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிக்கும் பரிந்துரையும் மாற்றமின்றி ஏற்றுக் கொள்ளப்படும் என நம்பப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க வரலாற்றில் முதன் முறையாக சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பொலிஸ்மா அதிபர் ஒருவர் இல்லாமல் இயங்கும் பொலிஸ் திணைக்களம், 35 ஆவது பொலிஸ்மா அதிபரை வரவேற்க தயாராகி வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பொலிஸ்மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட நிலையில், அவ்விடுமுறையில் இருந்த நிலையிலேயே கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். 

அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டது முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்போதுவரை பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வருகின்றார்.

34 ஆவது பொலிஸ்மா அதிபர் தெரிவின் போதும் சி.டி. விக்ரமரத்னவின் பெயர் அப்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 

எனினும் அதன்போது சிரேஷ்டத்துவத்தில் 3 ஆவது இடத்தில் அவர் இருந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர அப்பதவிக்கு அப்போது தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad