ஐந்து வருடத்திற்கு பின்னர் எமது கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவோம் - ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Monday, November 2, 2020

ஐந்து வருடத்திற்கு பின்னர் எமது கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவோம் - ரஞ்சித் மத்தும பண்டார

(செ.தேன்மொழி)

ஐக்கிய மக்கள் சக்தியை சக்தி வாய்ந்த அரசியல் கட்சியாக நாட்டு மக்களே தெரிவு செய்துள்ளார்கள். இந்நிலையில் கட்சியின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது என்று கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய மக்கள் சக்தியை சக்தி வாய்ந்த அரசியல் கட்சியாக நாட்டு மக்களே தெரிவு செய்துள்ளனர். அதற்கேற்ப கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை போன்று சிறந்த ஆளுமையுடைய தலைவர் ஒருவரும் கிடைக்கப் பெற்றுள்ளார். 

எமது வெற்றிகரமான அரசியல் பயணத்திற்கு சிலர் வேணும் என்றே இடையூறு விளைவிக்க முயற்சிக்கின்றனர். கட்சியின் கொள்கைக்கு புறம்பாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களை நாங்கள் திரும்பவும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ளப்போவதில்லை.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவிற்கும் கட்சிக்குள் இடமில்லை. இவர் எமது கட்சியின் பிரதி செயலாளராக செயற்பட்டிருந்தாலும் அவரை நாமாக விலக்குவதற்கு முன்னர், அவரே கட்சியிலிருந்து விலக வேண்டும். அதனை விடுத்து வெளியிலிருந்து எமது கட்சிக்கு அவர்களால் உரிமைகோர முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சி 20 வருட காலமாக உரிய நேரத்தில் உரிய தீர்மானம் எடுக்க தவறியதன் காரணமாகவே, கட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர். நாங்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி வந்து ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியுள்ளோம். அதற்கமைய நாங்கள் தொடர்ந்தும் மக்களின் நலனுக்காக செயற்பட்டு, எதிர்வரும் ஐந்து வருடத்திற்கு பின்னர் எமது கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தையும் உருவாக்குவோம்.

No comments:

Post a Comment