(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த 3 நாட்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் பெருமளவானோர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டனர். எனவேதான் அங்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
தொடர்ச்சியாக 10 நாட்கள் மேல் மாகாணத்தை முடக்க தீர்மானித்துள்ளமைக்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களை இலகுவாக இனங்காணக் கூடியதாக இருக்கும் என்பதோடு, ஏனைய பகுதிகளுக்கு பரவுவதையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு சட்டம் தொடர்பில் தனிநபரால் தீர்மானங்கள் எடுக்கப்படுவதில்லை. ஏதெனுமொரு பிரதேசத்தில் தொற்றாளர் இனங்காணப்படுதல் மற்றும் அவர் தொடர்புகளைப் பேணியமை குறித்து ஆராயப்பட்டு அதன் பின்னரே தனிமைப்படுத்தல் அல்லது ஊரடங்கு சட்டம் குறித்து தீர்மானிக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 179 தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டனர். கொழும்பில் 93 பேரும் களுத்துறையில் 33 பேரும் இனங்காணப்பட்டனர். இவற்றுக்கு மேலதிகமாக பேலியகொடை, குருணாகல் மற்றும் குளியாபிட்டியில் தொற்றாளர் இனங்காணப்பட்டனர்.
இவற்றினடிப்படையில் அவதானிக்கும் போது மேல் மாகாணத்திலிலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்தோடு சுமார் 3 நாட்களின் பின்னர் தாமதமாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலைமையும் காணப்படுகிறது. இவ்வாறான அனைத்து நிலைவரங்களை கவனத்தின் கொண்டே ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் ஒரு வார காலத்திற்கு நாடளாவிய ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவது குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு பிறப்பித்தால் மிக இலகுவாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று சிலர் எண்ணக்கூடும். எனினும் அனைத்து மக்களின் நலன்களையும் கருத்திற் கொண்டே இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளிலுள்ள மக்களுக்கு கடந்த மார்ச் தொடக்கம் மே மாதம் வரை பின்பற்றியதைப் போன்று நடமாடும் பொருள் விற்பனை நிலையம் மூலம் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தோடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுவோர் நிச்சயம் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment