நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்துள்ளதோடு கொரோனா மரணங்களும் 29 ஆக உயர்வடைந்துள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்துள்ள போதிலும் பேலியகொடை கொத்தணி இனங்காணப்பட்டதையடுத்து நேற்றைய தினம் முதன்முறையாக சிகிச்சை பெறுவோரை விட தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
அதற்கமைய மொத்த தொற்றாளர்களில் நேற்று மாலை வரை 6623 பேர் குணமடைந்துள்ளதோடு, 5918 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த தொற்றாளர்களில் 54.3 சதவீதமானோர் குணமடைந்துள்ள நிலையில் 45.5 சதவீதமானோர் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 7 மணி வரை கொவிட் தொற்றுக்குள்ளான 383 பேர் இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 9092 ஆக உயர்வடைந்துள்ளது. அதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 570 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது நாட்டில் தொடர்ச்சியாக தொற்றாளர்கள் இனங்காணப்படுவது மாத்திரமின்றி, தினமும் மரணங்களும் பதிவாக ஆரம்பித்துள்ளன. இவ்வாறு பதிவாகும் மரணங்களில் பெரும்பாலானவற்றில் உயிரிழப்புக்களின் பின்னரே தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் தொடர்ச்சியாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும், மரணங்கள் பதிவாகின்ற போதிலும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அன்றாட வாழ்வை முன்னெடுக்க அனைவரும் தயாராக வேண்டும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இந்நிலையில் பாராளுமன்ற செய்தியாளர்களில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கையும் ஐந்தாக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 6 பேருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு கேகாலை மாவட்டத்தில் அண்மையில் பொது சுகாதார பரிசோதகர்களின் அனுமதியின்றி இடம்பெற்ற திருமணத்தில் குறித்த புதுமணத்தம்பதிகள் இருவருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 120 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தபால் சேவை இடைநிறுத்தம்
கொழும்பு, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் சேவை காரியாலயத்தின் மக்களுக்கான சேவை வழங்கல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தெளிவுபடுத்தும் வகையில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலிலேயே மேற்கண்ட விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கெர்ழும்பு 10, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் சேவை காரியாலயத்தில் பணியாற்றும் அதிகாரியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், மீள அறிவித்தல் வரும் வரையில் அக்காரியாலயத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக அப்பகுதியை முழுமையாகத் தொற்று நீக்கிய பின்னர், மீண்டும் சேவையை ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் தபால்மாதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனியார் பல்பொருள் அங்காடி
பிரபல தனியார் பல்பொருள் அங்காடியொன்றின் மாத்தறை மாவட்ட கிளைக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை வந்து சென்ற நுகர்வோர் ஒருவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை குறித்த பல்பொருள் அங்காடி நிர்வாகம் அறிக்கையொன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இனங்காணப்பட்ட குறித்த தொற்றாளர் பல்பொருள் அங்காடியின் மதுபான பிரிவிற்கு மாத்திரமே சென்றுள்ளதாகவும் , குறித்த பிரிவின் கணக்கு பிரிவின் ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு
கொழும்பில் 2000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். அததோடு 5800 இற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 10000 பெறுமதியான உலர் உணவு பொதி கிடைக்காவிட்டால் கொழும்பு மாவட்ட செயலகத்தின் 0112369139 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும்.
ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாளாந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்காக 2333 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொனராகலை
811 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 4 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் ஐ.டி.எச். மற்றும் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மொனராகலை மாவட்ட செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார்.
கேகாலை
கேகாலை மாவட்டத்தில் அண்மையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட திருமண நிகழ்வில் குறித்த புதுமண தம்பதிகள் இருவருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பத்மகுமார வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 120 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் இதுவரையில் 151 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு 32,031 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பத்மகுமார வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தொற்று
வெலிக்கடை சிறைச்சாலையில் ஆண் கைதிகள் இருவருக்கும் பெண் கைதிகள் நால்வருக்கும் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துசார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment