கைகூடி வருகையில் அரசியலாக்கி குழப்ப முயல வேண்டாம் - நீதி அமைச்சர் அலி சப்ரி வேண்டுகோள் - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

கைகூடி வருகையில் அரசியலாக்கி குழப்ப முயல வேண்டாம் - நீதி அமைச்சர் அலி சப்ரி வேண்டுகோள்

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ள நாம் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். முஸ்லிம்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணத்துவ மருத்துவர்கள் உள்ளடங்கிய தொழிநுட்ப குழு அஞ்சுகிறது. அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்காமல் தடுக்கவில்லை. இதற்கான அனுமதியை பெறுவது தொடர்பில் தொடர்ந்தும் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார்.

கொரோனா தொற்றை நாட்டில் இருந்து இல்லாமல் ஒழிப்பதற்கும் பாதிக்கப்பட்டடிருப்பவர்கள் விரைவாக குணமடைய வேண்டியும் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற துஆ பிராத்தனையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்குதொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனாவால் இறக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதற்கு பதிலாக நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க முடியாதா என்று வினவி, தினமும் பல நூறு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஜனாஸாக்கள் எரிக்கப்படும் விவகாரத்தினால் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள வேதனையை என்னால் உணர்ந்து கொள்ள முடியும். அது தொடர்பில் நான் என்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றேன்.

இந்த விவகாரத்தை சிலர் அரசியலாக்கி வருகின்றனர். இன்னும் சிலர் எங்களை அடிப்படைவாதிகள் என காண்பிக்க முற்படுகின்றனர். இதில் எந்த அடிப்படைவாதமும் இல்லை. உலகில் இருக்கும் 189 நாடுகளில் கொரோனாவினால் இறக்கும் சடலங்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பும் இதற்கு அனுமதி வழங்கி இருக்கின்றது.

அத்துடன் ஆரம்ப காலத்தில் இந்த வைரஸ் தொடர்பாக எங்களுக்கு அச்சம் இருந்தது. ஏனெனில் அது தொடர்பில் போதிய அறிவு இருக்கவில்லை. ஆனால் தற்போது இது தொடர்பில் சாதாரண அறிவு எங்களுக்கு இருக்கின்றது. அதனால்தான் கடல் மட்டத்துக்கு குறைவாக இருக்கும் பிரதேசங்களில் சடலங்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

அதன் காரணமாகவே முஸ்லிம்களின் ஜனாஸாக்களையும் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சாதாரண கோரிக்கையை முன்வைக்கின்றோம். அதற்காக நாங்கள் அடிப்படைவாதிகள் ஆக முடியாது. சாதாரண கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதனை நிராகரிக்க முடியாது. 

கொவிட் 19 இனால் இறப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவும் அபாயம் இருக்கின்றதா என்பதை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து, சமூகத்தில் எந்த வகையிலும் பரவாத முறையில் நல்லடக்கம் செய்ய முடியுமான முறையை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இது தொடர்பான கோரிக்கையை நாங்கள் மீண்டும் முன்வைத்திருக்கின்றோம். இதன் மூலம் நாங்கள் நாட்டின் சட்டத்தை மீறி செயற்படுவதாக அர்த்தமாகாது. உலக சுகாதார அமைப்பினால் முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைக்கமையவே இதனை முன்வைத்திருக்கின்றோம். ஜனாஸாடக்களை நல்லக்கம் செய்ய அனுமதிக்காமல் இருப்பது அரசாங்கம் அல்ல. இது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டிருக்கும் 18 பேர் கொண்ட குழுவே இது தொடர்பில் முடிவு செய்கிறது. 

அடக்க அனுமதித்தால் ஏதோவொரு வகையில் வைரஸ் பரவும் என்ற அச்சத்தினால் இதற்கு அனுமதி வழங்க அச்சப்பட்டு வருகின்றது. இந்த குழுவில் இரண்டு முஸ்லிம் வைத்தியர்களும் இருக்கின்றனர். அமைச்சரவையிலும் இது தொடர்பாக நான் கதைத்தேன். அதன் பின்னர் அமைச்சரவையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த 18 பேர் கொண்ட குழுவை கடந்த வாரமும் நாங்கள் சந்தித்து பேசினோம். ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக அவர்கள் இதனை விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் உள்ளனர்.

நாங்கள் தொடர்ந்தும் இது தொடர்பாக எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனாாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ள முயற்சித்து வருகிறோம். 

முஸ்லிம்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்வதன் மூலமோ வெளிநாட்டு தூதரகங்களில் முறையிடுவதன் மூலமோ அனுமதியை பெற்றுக் கொள்ள முடியாது. அதன் மூலம் இந்த பிரச்சினை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி உட்பட பலரும் உரையாற்றினார்கள்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad