குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனியவுக்கு அந்த ஆணைக்குழு விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஷானி அபேசேகரவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்பட்ட நிலையில், அதனை மையப்படுத்தி அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பல முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு கிடைத்ததாகவும், அதனை மையப்படுத்தியே, அவரது பாதுகாப்பை உறுதி செய்ய இந்த பரிந்துரைகளை அனுப்புவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஷானி அபேசேகர விவகாரத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உன்னிப்பாக அவதானிக்கும் நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பின் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் அவரை அனுமதித்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.
1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரத்துக்கு அமைய குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment