(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் விவசாய நிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டும், அபிவிருத்தி என்ற பெயரில் அழிக்கப்பட்டும் வருகின்றன. எமது மூன்றாவது பரம்பரை வாழ நிலம் இல்லாத நிலையொன்று உருவாரு வருகின்றது. எனவே நில ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், நீண்ட காலமாக எமது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் அதேபோல் மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்ட விவசாயமானது, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 11 வீதமும், நாட்டின் தொழிலாளர்களில் 25 வீதமும், தேசிய உற்பத்தியில் 7 வீதமும், தொழிற்சாலை உற்பத்தியில் 35 வீதமும் பங்களிப்பு செலுத்தி வருகின்றது.
எனினும் விவசாயத்துறை எமது பொருளாதாரத்தில் செலுத்தும் பங்களிப்பு போதுமானதா என்ற கேள்வி எழுகின்றது, அதேபோல் விவசாயத்தில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கை எத்தகையது என்ற கேள்வியும் எழுகின்றது. இந்த கேள்விகளுக்கு விடை கண்டறிய வேண்டியுள்ளது. இவர்கள் சகல விதத்திலும் கடனாளியாக மாறியுள்ளனர்.
போதாத குறைக்கு நுண்கடன் நிறுவனங்களின் சூழ்ச்சியில் சிக்கியுள்ளனர். வாழ்க்கை தரத்திலும், கல்வி, சுகாதார அடிப்படை காரணிகள் அனைத்திலும் விவசாயிகளே பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதேபோல் விவசாயிகளின் தமது விவசாயத்திற்கான விதைகள் வழங்கும் திட்டத்தில் கண்டிப்பாக மாற்றங்களை செய்தாக வேண்டும்.
உலகில் உள்ள பிரதான மூன்று மாபியாக்களில் ஆயுதம், போதைப் பொருள் அடுத்தது விதைகள் உருவாக்கும் மாபியா உள்ளமையே உண்மையாகும். இறக்குமதி செய்யப்படும் விதைகளின் பெறுமதியை விடவும் நான்கு மடங்கு அதிகமான அல்லது அதனை விடவும் அதிக விலையில் விற்கப்படுகின்றது.
இலங்கையில் விதை சந்தை என எதுவும் இல்லை. இருந்த அனைத்தையும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளது. அதேபோல் சர்வதேச நாடுகளின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே எமக்கான சுயமான விதை உற்பத்திகள் இல்லாது போயுள்ளது. அதேபோல் எமது நாட்டின் நீர் நிலைகள் எமது விவசாயத்திற்கு பாரிய பங்களிப்பு செய்தது.
இன்று என்ன நடந்துள்ளது முறையான மழை வீழ்ச்சி இருந்தும் எம்மால் நீரை சேமிக்க முடியாது போயுள்ளது. ஆரம்பத்தில் 32 ஆயிரம் நீர்த் தேக்கங்கள் இருந்தன. அவற்றில் 14 ஆயிரம் நீர் நிலைகளே எமக்கு எஞ்சியுள்ளது. அவற்றையேனும் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கை என்ன? இன்றைய அபிவிருத்திகள் முழுமையாக இயற்கையை நாசமாக்கி வருகின்றது. எமது நீர் நிலைகளை, மலைகளை, காலநிலையை முழுமையாக அழித்து வருகின்றது.
இன்று உலகில் பல நாடுகளில் குழாய் நீர் கிடைப்பதில்லை, போத்தல் நீரை நம்பி வாழ்கின்றனர். ஆனால் எமது நாட்டில் இன்றும் குழாய் நீர் கிடைக்கின்றது. அவ்வாறு இருக்கையில் எமது குடிநீரை எவ்வாறு பாதுகாப்பது என்ற வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
1993 ஆம் ஆண்டு எமது நாட்டில் முதலாவது சிறுநீரக நோயாளி கண்டறியப்பட்டார். இன்று மூவரில் ஒருவருக்கு சிறுநீரக நோய் இருப்பதாக கூறப்படுகின்றது.
எமது நாட்டில் விவசாய நிலங்களை இன்று வெளிநாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்கி வருகின்றது. எமது மூன்றாம் பரம்பரைக்கு நிலம் இல்லாத சூழல் உருவாகி வருகின்றது. அவன்கார்ட் நிறுவனத்திற்கும், அமெரிக்க நிறுவனங்களுக்கும் ஏனைய நாட்டு நிறுவனங்களுக்கும் நிலங்களை விற்றுள்ளனர். இந்த நிலங்கள் அனைத்துமே விவசாயிகளின் நிலமாகும்.
எனவே எமது மூன்றாவது பரம்பரைக்காக வேண்டும் எமது நிலங்களை பாதுகாக்க வேண்டும். எனவே நில ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment