உயர் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் - வெளியானது புதிய வர்த்தமானி - News View

About Us

About Us

Breaking

Thursday, November 26, 2020

உயர் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் - வெளியானது புதிய வர்த்தமானி

(எம்.எப்.எம்.பஸீர்)

உயர் பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் செய்யும் அதிகாரம், பொலிஸ் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சின் (தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு) செயலாளருக்கு அதிகாரமளித்து அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் முதல் அதற்கு மேற்பட்ட பதவிகளை உடையவர்களின் இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பிலான அதிகாரம் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அப்பதவி நிலைக்கு கீழுள்ளவர்கள் தொடர்பில் செயற்பட பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது இவ்வாறு அமைச்சின் செயலாளருக்கு உயர் பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பிலான அதிகாரத்தை வழங்கும் விதமாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.ஏ.பி. தயா செனரத்தின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவி நிலைகளைக் கொண்ட அதிகாரிகளின் இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்த கட்டுப்பாடுகள், ஓய்வு பெறுதல் தொடர்பிலான கட்டளை தொடர்பில் தீர்மாங்களை எடுக்கும் அதிகாரம் அமைச்சின் செயலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

பொலிஸ் திணைக்களம் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியன சரத் வீரசேகரவின் அமைச்சின் கீழ் உள்வாங்கப்படும். 

எவ்வாறாயினும் இன்று வரை அவ்வமைச்சின் செயலாளர் யார் என அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரை அப்பதவிக்கு நியமிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment