மஹிந்த குடும்பம் மனிதாபிமானமிக்கது : கொரோனா பாதித்த ஜனாஸா விடயத்தில் நல்லது நடக்கும் - நம்பிக்கை வெளியிட்டார் அதாஉல்லா எம்.பி - News View

Breaking

Post Top Ad

Saturday, November 21, 2020

மஹிந்த குடும்பம் மனிதாபிமானமிக்கது : கொரோனா பாதித்த ஜனாஸா விடயத்தில் நல்லது நடக்கும் - நம்பிக்கை வெளியிட்டார் அதாஉல்லா எம்.பி

நூருல் ஹுதா உமர்

கொரோனாவின் நிலைகளை கட்டுப்படுத்த ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், அமைச்சர்கள் போன்றோர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். இதனில் ஒரே ஒரு குறைபாடுதான் இருக்கிறது. அதுதான் மரணித்தவர்களின் உடலை அடக்குகின்ற அல்லது எரிக்கின்ற விடயம். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது ராஜபக்ஸ குடும்பம் எப்போதும் மனிதாபிமானம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்று. எல்லோருடைய மதங்களின் கௌரவங்களையும் அவர்கள் பேணி கௌரவிப்பார்கள் என்பதில் நிறைய நம்பிக்கை இருக்கிறது என தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

நேற்று (21) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவு திட்ட விவாத உரை நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தனது உரையில் எங்களின் வைத்தியர்கள் இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவார்கள். வைத்தியர்களாக இருந்தாலும் சரி, விசேட நிபுணர்களாக இருந்தாலும் சரி அவர்கள் மத வழிபாட்டு நம்பிக்கைகளை கௌரவிப்பவர்கள். இந்த பிரச்சினை விரைவில் தீரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கொரோனா தொற்று இலங்கையை மட்டுமின்றி உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் நாம் அதனோடு ஒன்றித்து வாழும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் தெளிவாக சொன்னேன் கப்பல்கள் போக்குவரத்து செய்ய முடியாமல் இருக்கும் இக்காலகட்டத்தில் எமது நாட்டில் சிறந்த விவசாய நிலம் இருக்கிறது, அனுபவம் வாய்ந்த உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள், நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் இவர்களை கொண்டு எமது நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்வோம் என்று. குறிப்பாக பால் உற்பத்தியை விருத்தி செய்யவேண்டும். ஆனால் இப்போது அரசாங்கம் அதனில் கரிசனை செலுத்துகிறது.

அந்நிய செலவாணியை எமது நாட்டுக்கு ஈட்டித்தந்த தொழிலாளர்கள், பொறியலாளர்கள், துறை சார் நிபுணர்கள் என பலரும் இருக்கிறார்கள். அவர்கள் இன்று கொரோனாவினால் நிர்க்கதியாகி இருக்கிறார்கள். அவர்களை இந்த நாட்டுக்கு திருப்பியழைத்து வந்து அவர்களின் புலமையை இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த அரசாங்கம் முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad