(எம்.ஆர்.எம்.வஸீம்)
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் மேல் மாகாணத்துக்கு பகிர்ந்தளிப்பதற்காக சுமார் ஒன்றரை இலட்சம் கிலோ மீன் மூன்று கடற்றொழில் துறைமுகங்களில் இருந்து கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை மீன்பிடி கூட்டுத் தாபனத்தின் பணிப்பாளர் கிறிஷான்த்த ரத்னவீர தெரிவித்தார்.
ஊரடங்கு சட்டம் காரணமாக மேல் மாகாணத்தில் கடற்றொழில் துறைமுகங்களில் விற்பனை செய்ய முடியாமல் குவிந்திருக்கும் மீன்களை நுகர்வொருக்கு விநியோகிக்க எடுத்தவரும் நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் மேல் மாகாணத்தில் விநியோகிப்பதற்காக சுமார் ஒன்றரை இலட்சம் கிலோ மீன், மூன்று கடற்றொழில் துறைமுகங்களில் இருந்து விலைக்கு பெற்றுக் கொண்டு, நடமாடும் வாகனங்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக மீன்பிடி துறைமுகங்களில் விற்பனை செய்ய முடியாமல், மீன்கள் குவிந்திருக்கின்றன. இவ்வாறு குறிவிந்திருக்கும் மீன்களை விநியோகிக்க 12 நடமாடும் வாகனங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில் கொழும்பு மாவட்டத்துக்கு 4 நடமாடும் வாகனங்களும் கம்பஹா மாவட்டத்துக்கு 8 நடமாடும் வாகனங்களும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பிரதேசங்களில், மக்கள் தங்களுக்கு தேவையான மீன் வகைகளை, கடற்றொழில் கூட்டுத் தாபனங்களின் விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்ய முடியும். அதற்கு ஏற்ற வகையில் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
அத்துடன் இதுவரை கடற்றொழில் துறைமுகங்களில் இருந்து விலைக்கு பெற்றுக் கொள்ளப்பட்ட சுமார் ஒரு இலட்சத்தி 20 ஆயிரம் கிலோ மீன் விநியோகிக்கப்பட்டுள்ளபோதும், நுகர்வோருக்கு தேவையான அளவு மீன் தொகை இன்னும் கிடைக்கவில்லை என்றார்.
No comments:
Post a Comment