கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு முழுமையாக வழங்கப்படாது - எமது நாட்டில் உணவு தட்டுப்பாடு ஒருபோதும் ஏற்படாது : மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 25, 2020

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு முழுமையாக வழங்கப்படாது - எமது நாட்டில் உணவு தட்டுப்பாடு ஒருபோதும் ஏற்படாது : மஹிந்தானந்த

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு முழுமையாக வழங்கப்படமாட்டாது தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு விற்கும் கொள்கை அரசாங்கத்துக்கு கிடையாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய விவசாயத்துறையை மேம்படுத்த வலுவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 5 மாத காலத்துக்கு தேவையான அரிசி போதுமான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பெரும்பாலான நாடுகளில் உணவு தட்டுப்பாடு நிலவும் என உலக உணவு ஸ்தாபனம் எதிர்வு கூறியுள்ளது. எமது நாட்டில் உணவு தட்டுப்பாடு ஒருபோதும் ஏற்படாது. 

வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றை 2024 ஆம் ஆண்டுக்குள் உள்ளூர் மட்டத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கிழக்கு முனையம் குறித்து எதிர்த்தரப்பினர் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். கிழக்கு முனையம் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 40 வீதம் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது. 

கடந்த அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது எளிமையான விடயமல்ல. அயல்நாடுகளுடன் அரசாங்கம் நற்புறவுடன் செயற்படும்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. 51 வீத உரிமம் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு வழங்கும் கொள்கை அரசாங்கத்துக்கு கிடையாது. கடந்த அரசாங்கம் செய்த தவறுகளின் பிரதிபலனை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை தற்போது தோன்றியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment