வடமத்திய மாகாணத்தில் எட்டு பேரில் ஒருவருக்கு போஷாக்கு குறைபாடு - அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியா அதிகமாக உள்ளது : பேராசிரியர் திஸ்ஸ விதாரண - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

வடமத்திய மாகாணத்தில் எட்டு பேரில் ஒருவருக்கு போஷாக்கு குறைபாடு - அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியா அதிகமாக உள்ளது : பேராசிரியர் திஸ்ஸ விதாரண

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

வடமத்திய மாகாணத்தில் எட்டு பேரில் ஒருவர் போஷாக்கு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வடமத்திய மாகாணத்தில் நூற்றுக்கு 12.5 பேர், அதாவது எட்டு பேரில் ஒருவர் போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2018ஆம் ஆண்டுக்கான புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகமாக அரிசி உற்பத்தி செய்யப்படும் மாகாணங்களில் வடமத்திய மாகாணமும் ஒன்றாகும். இது தொடர்பில் நான் ஆளுனராகவிருந்த குறுகிய காலத்தில் ஆய்வு செய்வதற்காக பல கிராமங்களுக்குச் சென்றேன்.

இங்குள்ள விவசாயிகளுக்கு நெல்லுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. வறுமையான விவசாயக் குடும்பங்கள்தான் போஷாக்கு குறைபாட்டில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதற்கு பிரதான காரணம் ஒருபுறம் கடனும் மறுபுறம் நெல்லுக்கு போதிய விலை கிடைக்காமையுமாகும். அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியா இங்கு அதிகமாக உள்ளது. இந்நிலையில்தான் இந்த மக்கள் போஷாக்கு குறைப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக் காலத்தில் இங்குள்ளவர்களின் ஏனைய வருமான வழிமூலங்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருந்தன. ஒருசில குடும்பங்கள் ஒருவேளைதான் உண்ணுகின்றனர். அதனால்தான் போஷாக்கு குறைப்பாடு காணப்படுகிறது. இங்கு விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை.

எமது நாடு விவசாய நாடாக உள்ளபோதிலும் தலா தேசிய வருமானத்தில் 5 சதவீதம் மாத்திரமே வடமத்திய மாகாணத்திலிருந்து கிடைக்கப் பெறுகிறது. எமது உற்பத்தித்துறையில் குறைப்பாடுகள் உள்ளன. இதனை எமது கட்சியின் விவசாயக் குழு ஆய்வொன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இங்குள்ள காணிகள் பல அமைச்சுகளுக்கும் திணைக்களங்களுக்கும் பகிரபப்பட்டுள்ளன. இது முழுமையான செயற்பாடு இல்லை. அதிகமாக வறுமை நிலை காணப்படுகின்றமைக்கு இவ்வாறான நிலைமைகள்தான் காரணம். இங்கு கூட்டுறவு முறைமைகளை வலுப்படுத்த வேண்டும். இடைத்தரகர்களின் கொள்ளையை தடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment