நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு இடமாற்றம் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 22, 2020

நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு இடமாற்றம்

(எம்.எப்.எம்.பஸீர்) 

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, அபாயகரமாக வாகனம் செலுத்தி, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வாகன காட்சி அறைக்கு கடுமையான சேதங்களை விளைவித்தமை தொடர்பில், நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் மகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதனை மையப்படுத்தி நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரதீப் ரத்நாயக்கவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை பொலிஸ் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்த அவர், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணிமனையில் சாதாரண கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். 

இவ்வாறான நிலையில், வெற்றிடமான நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பதவிக்கு, பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நுவன் அசங்க தற்காலிகமாக பதில் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நுவன் அசங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு பணிப்பாளராக உள்ள சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் செய்துள்ள மேன் முறையீடு காரணமாக அது குறித்த தீர்மானம் நிலுவையில் உள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே நுவன் அசங்க நுகேகொடை பொலிஸ் வலயத்தின் பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கறுவாத்தோட்டம் விபத்தையடுத்து, கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேக நபரான ரொஷானி மதூஷா ரத்நாயக்க எனும் யுவதி, சட்டத்தரனி ஊடாக மன்றில் ஆஜரான நிலையில், 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் கொழும்பு மேலதிக நீதிவான் ஹிரோஷி காஹிங்கலவினால் விடுவிக்கப்பட்டார்.

இதற்கு முன்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரதீப் ரத்நாயக்க ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய போது, அவரது மகன் டிபண்டர் வண்டியை செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் அதன்போது, பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad