(நா.தனுஜா)
அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாராளுமன்றத்தில் ஆதரவைப் பெற்றுக் கொண்ட விதம், மேலும் கொள்கை ரீதியானதாகவும் கௌரவம் மிக்கதாகவும் அமைந்திருந்தால், அது நாட்டிற்கும் ஜனாதிபதிக்கும் கௌரவம் சேர்ப்பதாக அமைந்திருக்கும் என்று, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் எவ்வாறெல்லாம் மிக மோசமாக செயற்பட்டார்கள் என்பது இரகசியமான விடயமொன்றல்ல.
தற்போதேனும் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கான போட்டியைக் கைவிட்டு, நாட்டு மக்களை முன்னிறுத்தி செயற்பட அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் கரு ஜயசூரிய இன்றையதினம் வெளியிட்டிருக்கும் காணொளியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது எமது நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக மிகவும் மோசமான வைரஸ் தொற்றுப் பரவல் ஒன்று ஏற்பட்டு மக்கள் அனைவரும் தம்மையும் தமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வதற்கும் வாழ்வாதாரத்தை உறுதிசெய்து கொள்வதற்கும் கடுமையாகப் போராடி வரும் சூழ்நிலையொன்றிலேயே நாம் இப்போது இருக்கின்றோம்.
எனவே, எவ்வித அரசியல் மற்றும் கட்சி பேதங்களுமின்றி நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துகின்றோம்.
அடுத்ததாக கடந்த வாரம் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டதன் ஊடாக உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்த ஜனாதிபதிப் பதவி இலங்கையில் உருவானது.
எனினும் எதிர்காலத்தில் அதிகாரத்தின் மீது பேராசை கொண்ட ஒரு நபரிடத்தில் இந்த மட்டுமீறிய அதிகாரங்கள் கையளிக்கப்படுமாக இருந்தால், அது நாட்டிற்கு மிகப்பாரிய அழிவையே ஏற்படுத்தும் என்பதால், நாம் ஒருபோதும் 20 ஆவது திருத்தத்தை ஆதரிப்பதற்குத் தயாராக இல்லை.
எனினும், தற்போதைய ஜனாதிபதி நாட்டின் ஜனநாயகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த அதிகாரங்களைப் பயன்படுத்த மாட்டார் என்று நாம் நம்புகின்றோம்.
அவருக்கு ஒரு தரப்பினர் வாக்களித்தும் மற்றொரு தரப்பினர் வாக்களிக்காமல் இருந்தாலும் கூட, நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவமாக நடத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கிறது.
அதேவேளை, அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்ட விதம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
மாதுலுவாவே சோபித தேரரின் கொள்கைகளைப் பின்பற்றும் அமைப்பு என்ற வகையில், 20 ஆவது திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் ஆதரவைப் பெற்றுக் கொண்ட விதம், மேலும் கொள்கை ரீதியானதாகவும் கௌரவம் மிக்கதாகவும் அமைந்திருந்தால் அது நாட்டிற்கும் ஜனாதிபதிக்கும் கௌரவம் சேர்ப்பதாக அமைந்திருக்கும் என்று கருதுகின்றோம்.
அத்தோடு இதுவரை காலமும் அனைவரையும் பிரித்து வைத்திருந்த 20 ஆவது திருத்தத்தை ஒரு பெட்டகத்தில் வைத்து மூடிவிட்டு, இனியேனும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், கடந்த காலத்தில் சுகாதாரப் பிரிவினர், பாதுகாப்புப் பிரிவினர், இராணுவத்தினர் உள்ளிட்டோர் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக போராடிக் கொண்டிருந்த போது சில அரசியல்வாதிகள் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, எவ்வாறெல்லாம் மிக மோசமாக செயற்பட்டார்கள் என்பது இரகசியமான விடயமொன்றல்ல.
தற்போதேனும் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கான போட்டியைக் கைவிட்டு, நாட்டு மக்களை முன்னிறுத்தி செயற்பட அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment