கனேடிய உயர்ஸ்தானிகர் பதவிக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
விரைவில் ஓய்வுபெறவுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.
சுமங்கல டயஸ் உள்ளடங்கலாக மேலும் எட்டு பேரின் பெயர்கள் உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
நைஜீரியாவிற்கான உயர்ஸ்தானிகராக ஏ.எம்.ஜே. சாதிக், சவுதி அரேபியாவிற்கான தூதுவராக அஹமட் ஏ. ஜாவத், நெதர்லாந்திற்கான தூதுவராக அருணி ரணராஜா, சுவீடனுக்கான தூதுவராக தர்ஷன பெரேரா, எகிப்திற்கான தூதுவராக எம்.கே. பத்மநாதன், போலந்திற்கான தூதுவராக எஸ்.டி.கே. சேமசிங்க, தாய்லாந்திற்கான தூதுவராக சமிந்த கொலொன்னே மற்றும் கட்டாருக்கான தூதுவராக மபாஸ் மொஹிதீன் ஆகியோரே இராஜதந்திர உயர் பதவிகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஏனைய எண்மராவர்.
அத்தோடு தகுதி வாய்ந்த தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களிலிருந்து 9 பிரதிநிதிகளுக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 7 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்றக்குழு கோரியிருக்கிறது.
அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை ஆராய்ந்து அவர்களில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் இராஜதந்திரப் பதவிகளை வகிப்பதற்குத் தகுதி வாய்ந்தவர்களை பாராளுமன்றக்குழு தெரிவு செய்யும்.
உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவிற்கு தமது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்கள் அவர்களது சொத்து, பொறுப்பு விபரங்களையும் கையளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment