மட்டக்களப்பில் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குகள் வீண் - சிறிநேசன் அரசியலில் காணாமல் போவிட்டார் - ஹிஸ்புல்லாவின் முகவர்தான் சாணக்கியன் : இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

மட்டக்களப்பில் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குகள் வீண் - சிறிநேசன் அரசியலில் காணாமல் போவிட்டார் - ஹிஸ்புல்லாவின் முகவர்தான் சாணக்கியன் : இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

(வ.சக்திவேல்)

மக்களின் பிரச்சினைகளை உண்மையாக நாடிபிடித்துப் பார்த்து அதனை யார் நிறைவு செய்து கொடுக்கின்றாரோ அவர்தான் மக்களால் தெரிவு செய்யப்படுவார். மாறாக மக்களின் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு பிழைப்பு வாத அரசியல் செய்வாராக இருந்தால் அவரை அரசியலிலிருந்து மக்கள் காணாமலாக்கி விடுவார்கள் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலைக் கிராமத்தில் அவரது ஏறாவூர் பற்றுக்கான காரியாலயத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்து கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எமது பிறப்பின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு முன்னால் 400 பேர் எழுந்து நின்று மாலை போடுவதும், கைதட்டுவதுமல்ல. எம்மால் 4 போர் வாழ்ந்தார்களா என்பதாகத்தான் இருக்க வேண்டும். எனவே எமக்கு மக்கள் தந்துள்ள ஆணையால் 400 பேரல்ல 4000 க்கு மேற்பட்டவர்களை வாழ வைப்பதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் தற்போது முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் எமது மக்களின் அரசில் இருப்பை உறுத்திப்படுத்துவதற்காக மக்களின் நில, வளம், பொருளாதாரம், கல்வி, விளையாட்டு போன்ற இன்னோரன்ன துறைகள் கட்டியெழுப்பப்படல் வேண்டும். சமத்துவத்துடன் ஏனைய சமூகங்களுக்கு நிகராக எமது சமூகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். யாருக்கும் கை கட்டி, தலைகுனிந்து வாழக்கூடாது என்பதுதான் எமது அடிப்படை நோக்கமாகும்.

அதற்காக வேண்டி எமது மக்களுக்கு உரிமையுடன் சார்ந்த அரசியலைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். நானும் எதிர்க்கட்சியில் இருந்து செயற்பட்டவன். கடந்த நான்கரை வருடங்களில் 20 பேருக்குக்கூட எங்களால் வேலை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு வாக்களித்ததுதான் மிச்சம் எதுவித நன்மைகளுமில்லை.

நாங்கள் மக்களுக்கு வேலை செய்கின்றோம் என நான் அண்மையில் எதிர்க்கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், “எங்கு பார்த்தாலும் வீதி அபிவிருத்தி வீட்டுத் திட்டங்கள் என அபிவிருத்திகள் நடைபெறுகின்றன. இவ்வாறு போனால் நாங்கள் எவ்வாறு அரசியல் செய்வது என்பது எமக்குத் தெரியும் ஆனாலும் உங்களை விமர்சனம் செய்தால்தான் எங்களுக்கு அரசியல்” என அவர் என்னிடம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களால் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் வீண் வாக்குகள். அவர்களால் நூற்றுக்கணக்கானவர்களின் வேலை வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளது, பலரின் அடுப்பு எரியும் நிலைமை இல்லாமல் போயுள்ளது. குறிப்பாக சாணக்கியன் எம்.பி. வேலை வாய்ப்பு தொடர்பில் துள்ளிக் குதிக்கின்றார்.

உரிமை பேசி மக்களிடம் வாக்குக் கேட்டு வந்தவர்கள் உரிமையைப் பெற்றுக் கொடுக்கலாம். நாங்கள் அபிவிருத்தியைச் செய்கின்றோம். அவர்கள் உரிமையைப் பெற்றுக் கொடுக்கலாம். அதனை அவர்களால் முடியாது. எனவே அபிவிருத்தியையும் செய்ய முடியாது, உரிமையையும் பெற்றுக் கொடுக்க முடியாது. எதுவும் செய்யாமல், அனைத்தையும் குற்றம் சுமத்துகின்றவர்கள் மற்றவரின் சட்டியில் என வேகுது என்று பார்ப்பதைவிட உங்களுடைய சட்டியில் என்ன கருகுது என்று பாருங்கள் என நான் அவ்வாறானவர்களுக்கு ஆலோசனை கூறுகின்றேன். எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எங்களால் செய்யக்கூடிய வேலைகளை நாங்கள் செய்துகொண்டு போகின்றோம்.

மக்களின் பிரச்சினைகளை உண்மையாக நாடிபிடித்துப் பார்த்து அதனை யார் நிறைவு செய்து கொடுக்கின்றாரோ அவர்தான் மக்களால் தெரிவு செய்யப்படுவார். மாறாக மக்களின் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு பிழைப்புவாத அரசியல் செய்வாராக இருந்தால் அவரை அரசியலில் இருந்து மக்கள் காணாமலாக்கி விடுவார்கள்.

2018 இல் அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முன்வந்தபோது, தங்கேஸ்வரி, இராஜத்துரை உள்ளிட்டோர் ஆளும் கட்சியில் தேர்தலில் குதித்து அவர்கள் அரசியலில் காணாமல் போய்விட்டார்கள். அதுபோல் வியாழேந்திரன் அவர்களும் ஆளும் கட்சியில் கேட்டு காணாமல் போய்விடுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். ஆனால் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலே அவர் அரசியலில் காணாமல் போவிட்டார்.

எனவே எவராயினும் மற்றவர்களை விமர்சிக்காமல் உங்களால் மக்களுக்கு என்ன செய்யலாம் என்பதைப் பாருங்கள், மாவட்டத்திலுள்ள மாதவனை, வாகரை, வெல்லாவெளி, பட்டிப்பளை உள்ளிட்ட இடங்களிலெல்லாம் எழுந்துள்ள காணிப் பிரச்சினைகளுக்கெல்லாம் நாங்களும் போராடுகின்றோம். 2015 ஆம் ஆண்டிலிருந்து 42 இற்கு மேற்பட்ட, மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழர்கள் தமிழ் தாய்க்குப் பிறந்திருந்தல் அரசாங்கத்தை விட்டு வெளியேறுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது 2015 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவர்தான் இந்த சாணக்கியன். அப்போது அவர் அவருடைய பிறப்பைப் பற்றிச் சிந்திக்கவில்லை. தமிழர்களின் வாக்குகளை ஹிஸ்புல்லாவுக்கு சேகரித்துக் கொடுத்த முகவர்தான் அவர். பின்னர் அதிலிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சிக்குத் தாவினார்.

மக்களை தொடர்ந்து ஏமாற்றியதன் காரணமாகத்தான் ஆளும் கட்சியில் மட்டக்களப்பில் நான் வெற்றி பெற்றிருக்கின்றேனா? தமிழ் மக்களை ஏமாற்றி யாராவது வாக்குப் பெறுவோம் என நினைத்தால் அவர் தூக்கி எறியப்படுவார்.

எனவே லட்சக்காணக்கான இளைஞர், யுவதிகள் 680 சதுர கிலோமீற்றர் கொண்ட கொழும்பில் பல தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றபோது 2800 சதுர கிலோமீற்றர் கொண்ட கொழும்பை விட 4 மடங்கு நிலப்பரப்புக் கொண்ட மட்டக்களப்பபு மாவட்டத்தில் ஏன் 10 ஆயிரம் பேர் வேலை செய்யக்கூடாது? மிக விரைவில் ஏறாவூர் பற்றில் ஒரு தொழிற்சாலை உருவாக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad