இலங்கையில் ஏற்பட்ட இரண்டாவது கொரோனா அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம், இதற்கு சிறந்த உதாரணம் தேசிய பரீட்சைகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டமை என்கிறார் இராணுவத் தளபதி - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

இலங்கையில் ஏற்பட்ட இரண்டாவது கொரோனா அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம், இதற்கு சிறந்த உதாரணம் தேசிய பரீட்சைகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டமை என்கிறார் இராணுவத் தளபதி

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் ஏற்பட்ட இரண்டாவது கொரோனா அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம் என்று உறுதியாகக்கூற முடியும். இதற்கு சிறந்த உதாரணம் தேசிய பரீட்சைகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டவையாகும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மினுவாங்கொடை கொத்தணி உருவாகியதன் பின்னர் பேலியகொடை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம், ஹொரணை ஆடை தொழிற்சாலை என பல கிளை கொத்தணிகள் உருவாகிய போதிலும் அவற்றுக்கு மத்தியில் இவ்வாறு கொத்தணியை கட்டுப்படுத்த முடிந்தமையை பாரிய வெற்றியாகவே கருதுவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஞாயிற்றுக்கிழமை இனங்காணப்பட்ட 704 தொற்றாளர்களில் மூவர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாவர். ஏனைய 701 பேரும் உள்நாட்டிலேயே இனங்காணப்பட்ட தொற்றாளர்களாவர். இவர்களில் 541 பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள். கம்பஹா மற்றும் களுத்துறை உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் இனங்காணப்பட்டனர். கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலேயே பெருமளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படும் தொற்றாளர்கள் அனைவரும் 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். அத்தோடு அவர்களுடன் தொடர்புடையவர்களும் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள். எழுமாறாக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கும் மேலதிகமாக தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட சில இடங்களையும் இலக்காகக் கொண்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

9000 - 13,000 ஆயிரம் சனத் தொகையை இலக்காகக் கொண்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தரப்பு தெரிவிக்கிறது. அதற்கேற்பவே கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பகுதிகள் இவ்வாறு இலக்காகக் கொண்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போது கொழும்பில் இனங்காணப்படுகின்ற தொற்றாளர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலைமையே காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் தினுகா குருகே தெளிவுபடுத்தியுள்ளார். வீடுகளிலேயே தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மினுவாங்கொடை கொத்தணியில் இனங்காணப்பட்ட 3107 தொற்றாளர்களில் தற்போது 107 பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மினுவாங்கொடையில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்ட போது 2000 பேர் தொற்றுக்குள்ளாகி நிறைவடைந்துவிட்டது. 

எவ்வாறிருப்பினும் நாம் இலங்கையில் ஏற்பட்ட இந்த இரண்டாவது அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம். இதற்கு சிறந்த உதாரணம் தேசிய பரீட்சைகள் நடத்தப்பட்டவையாகும். 

கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, டாம் வீதி மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையிலேயே அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையினாலேயே குறித்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நீர், மின்சாரம், போக்குவரத்து மற்றும் தேவையேற்படின் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள வங்கி கிளைகளில் எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெறாது என்பதால் அவற்றை திறக்க வேண்டிய அவசியம் கிடையாது.

எனினும் வங்கிகளின் தலைமை அலுவலகம் அல்லது ஏதேனும் அரச அல்லது ஏனைய பிரதான அலுவலகங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்திருக்குமாயின் அவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

எவ்வாறிருப்பினும் இவற்றில் முடிந்தளவு குறைந்தளவிலான ஊழியர்களை வரவழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று நீண்ட தூரம் பயணிக்கும் பஸ் மற்றும் புகையிரத சேவைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

தனியார் துறை மற்றும் தனியார் சேவைகள் என்பன வேறு வேறானவையாகும். தனியார் சேவை எனும் போது வங்கி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அத்தோடு வெளிநாட்டு ஏற்றுமதியுடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்களையும் நடத்திச் செல்ல அனுமதி வழங்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad