பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
காரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றியானது, தமிழ் - முஸ்லிம் இனங்களின் வெற்றி என்பதுடன், ஒற்றுமையுடன் ஏகமனதாக வாக்களித்த உறுப்பினர்களின் செயற்பாடு ஏனைய சபைகளுக்கு எடுத்துக்காட்டான விடயம் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்ட, காரைதீவுப் பிரதேச சபையின் 33வது மாதாந்த அமர்வில் புதிய ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் வெற்றி பெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு இன்று (10) கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
காரைதீவு பிரதேச சபையின் பாதீடு விடயத்தில் இரு இனங்கள் வாழும் பிரதேசத்தில் ஒற்றுமையுடன் ஏகமனதாக வாக்களித்த உறுப்பினர்களின் செயற்பாடு ஏனைய சபைகளுக்கு எடுத்துக்காட்டானதொரு விடயமாகும்.
பல குளறுபடிகளைக் கொண்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தவிசாளர் ஒருவர் தொடர்ந்து நீடிக்க முடியாத நிலையில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடு பாராட்டப்பட வேண்டும்.
காரைதீவு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமானதாக அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
33வது சபை அமர்வின் போது புதிய ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில் தலைமையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்போது, சபையின் தவிசாளர் உள்ளிட்ட 12 உறுப்பினர்களின் பங்களிப்பில் ஏகமனதாக வரவு செலவுத்திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளமை தமிழ், முஸ்லிம் மக்களின் வெற்றியாகும் என்றார்.
No comments:
Post a Comment