மஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Monday, November 30, 2020

மஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை சம்பந்தமாகச் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் விசாரணைகள் நடத்தப்படுவதாகச் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். எனினும் இவ்வாறான விசாரணைகளில் உண்மைகளைக் கண்டறிய முடியாது என்பதால், சுயாதீன குழுவை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலினால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட காரணத்தினால்தான் இந்த மோதல் சம்பவம் அங்கு ஏற்பட்டுள்ளது. 189 பேரளவில் இதுவரை அங்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், அரசாங்கம் அங்குள்ள கைதிகளை பாதுகாக்க எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று நாம் கேட்கவிரும்புகிறோம்.

அத்தோடு, இது தொடர்பாக அரசாங்கம் சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையொன்றையும் முன்னெடுக்க வேண்டும். இதற்காக விசேட குழுவொன்றையும் நியமிக்க வேண்டும்.

இந்த சம்பவத்தை ஒருபோதும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. பொதுமக்களாக இருந்தாலும், கைதிகளாக இருந்தாலும் அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பாகும்.

இவ்வாறான நிலையில், சிறைச்சாலைகளுக்குள் எவ்வாறு இந்தத் தொற்று பரவியது? இது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.

மஹர மட்டுமன்றி, ஏனைய சிறைச்சாலைகளிலும் இன்று இடநெருக்கடி காணப்படுகிறது. இதுதொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment