போகம்பறை சிறைச்சாலையிலிருந்து ஐந்து கைதிகள் தப்ப முயற்சி - ஒருவர் பலி, ஒருவர் தலைமறைவு, மற்றையவர்கள் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

போகம்பறை சிறைச்சாலையிலிருந்து ஐந்து கைதிகள் தப்ப முயற்சி - ஒருவர் பலி, ஒருவர் தலைமறைவு, மற்றையவர்கள் கைது

பழைய போகம்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்த 5 சிறைக்கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டியில் உள்ள பழைய போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொரோனா தொற்றுடைய 5 சந்தேகநபர்கள் இன்று (18) அதிகாலை 1.00 மணியளவில் சிறைச்சாலையிலிலிருந்து தப்பிக்க முயன்ற போதே இச்சம்பவம் நிகழந்துள்ளது.

குறித்த கைதிகள் ஐவரும் 30 அடி உயர சிறைச் சுவர் மீது ஏற முயன்ற நிலையில், அதனைன அவதானித்த சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் கைதியொருவர் சிறைச்சாலை சுவரிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும், அவர் மீது துப்பாக்கிச்சூடு காயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 3 கைதிகள் சுவரில் இருந்து குதித்து சிறைச்சாலைக்கு வெளியே தப்பித்துள்ளதோடு, ஏனைய 2 பேர் சிறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளியே குதித்த மூவரில் ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், ஏனைய இருவரும் கடுமையான காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம், கட்டுகெலியாவைச் சேர்ந்த, 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கண்டி பிரிவுக்கு பொறுப்பான, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சுதத் மாசிங்க தெரிவித்தார்.

கொலைக் குற்றம் தொடர்பான குறித்த சந்தேகநபர், போதைப் பொருள் விற்பனையுடனும் தொடர்புடையவர் என, பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

காயமடைந்த மற்றைய நபர் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்பதோடு, அவர் கொவிட்-19 தொற்றுடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோருக்கு சிகிச்சை வழங்கும் பிரிவில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, கண்டி தேசிய வைத்தியசாலையின், பதில் பணிப்பாளர் இரேஷா பெனாண்டோர் தெரிவித்தார்.

மரணமடைந்தவர் மீது துப்பாக்கிச் சூடு காணப்பட்ட போதிலும், வெளிப்புற காயங்கள் தென்படவில்லை என்றும், இது தொடர்பில் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே உறுதியான அறிக்கை அளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

சிறையில் இருந்து தப்பிச் சென்ற மூன்று பேரில் ஒருவர், போகம்பறை பொலிஸ் குடியிருப்பு அமைந்திருந்த பகுதி வழியாக தப்பி ஓடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய பொலிஸார் விசேட அதிரடிப் படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க தெரிவித்தார்.

சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற மூன்று கைதிகளில் ஒருவர் நேற்று காலை, சிறை வளாகத்திலுள்ள பெரிய மரமொன்றில் ஏறி போரட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மரணமடைந்தவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில், அவருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கேகாலை, பல்லேகலை அத்தியட்சகர்களின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, தனது வழிகாட்டலின் கீழ், கொழும்பு பொலிஸ் நிலையத்தினாலும் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுதத் மாசிங்கவின் தெரிவித்தார்.

எம்.ஏ. அமீனுல்லா

No comments:

Post a Comment

Post Bottom Ad