ஒக்டோபர் மாதத்தை விட நவம்பர் எச்சரிக்கை மிக்கது - பொலிஸ் கொத்தணியை கட்டுப்படுத்தாவிட்டால் தொற்றாளர்களை இனங்காண்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 16, 2020

ஒக்டோபர் மாதத்தை விட நவம்பர் எச்சரிக்கை மிக்கது - பொலிஸ் கொத்தணியை கட்டுப்படுத்தாவிட்டால் தொற்றாளர்களை இனங்காண்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா) 

ஒக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் எச்சரிக்கையுடையதாகவுள்ளது. எனவே தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய பிரதேசங்களை துரிதமாக இனங்கண்டு அடையாளப்படுத்த வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு பொலிஸ் கொத்தணி துரிதமாக முழுமையாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் தொற்றாளர்களை இனங்காண்பதிலும் தொற்று பரவல் கட்டுப்படுத்திலிலும் பாரிய பாதிப்பு ஏற்படும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. 

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஒக்டோபர் மாதத்தில் பத்தாயிரத்திற்கு சற்று குறைந்தளவான தொற்றாளர்களே இனங்காணப்பட்டனர். எனினும் இரு வாரங்களில் 6000 தொற்றாளர்கள் வரை இனங்காணப்படக்கூடிய நிலைமை நவம்பர் மாதத்தில் ஏற்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் அபாய நிலையிலுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 

இது போன்றே மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை மரணங்கள் எவையும் இனங்காணப்படவில்லை என்றாலும், ஞாயிறன்று 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெருமளவானவை கொழும்பில் பதிவாகிய மரணங்களாகும். 

அதற்கமைய அபாயம் எங்கு காணப்படுகிறது என்பது தெளிவாகிறது. கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகள் தற்போதும் எச்சரிக்கை மிக்கவையாகவே உள்ளன. இவற்றை நாம் சரியாக இனங்காண வேண்டும். 

அதன் காரணமாகவே மேல் மாகாணத்தில் பல பொலிஸ் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தன்மை நேரடியாக கண்காணிக்கப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும்.

அதே போன்று பொலிஸ் கொத்தணி தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. காரணம் பொலிஸ் உத்தியோகத்தர்களில் பெருமளவானோர் தனிமைப்படுத்தப்பட்டால் அது தொற்றாளர்களை இனங்காண்பதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். 

எவ்வாறிருப்பினும் பொலிஸ் கொத்தணி தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தும் பேணுவதற்கு தொழிநுட்ப ரீதியான நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment