பூசா சிறையிலிருந்து சமூகத்திற்குள் கொரோனா பரவலாம் - பிணையில் விடுதலையானவர்கள் தொடர்பு கொள்ளளுமாறு வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 17, 2020

பூசா சிறையிலிருந்து சமூகத்திற்குள் கொரோனா பரவலாம் - பிணையில் விடுதலையானவர்கள் தொடர்பு கொள்ளளுமாறு வேண்டுகோள்

கடந்த 15 நாட்களில் காலியில் உள்ள பூசா சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட அனைத்து கைதிகளும் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது சுகாதார அதிகாரிகளிடம் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் யக்கமுல்லையில் உள்ள தனது வீட்டிலிருந்த வேளை கொரோனா நோயாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே அதிகாரிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

கடந்த 31ஆம் திகதிக்குப் பின்னர் 40க்கும் அதிகமானவர்கள் பிணையில் விடுதலையாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதன்கிழமை 11ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எழுந்தமானமான பிசிஆர் சோதனையின் போது பூசா சிறைச்சாலையில் மூன்று கைதிகள கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

13ஆம் திகதி மேலும் சோதனைகளை மேற்கொண்டவேளை மேலும் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மேலும் 235 பேரை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள் மேலும் இரு நோயாளிகளை கண்டுபிடித்துள்ளனர். 

இதன் மூலம் பூசா சிறைச்சாலையின் மூன்று பகுதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளமை உறுதியாகியுள்ளது. எனினும் சிறைச்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பிணையில் விடுதலையானவர்கள் மூலம் வைரஸ் சமூகத்திற்குள் பரவலாம் என சுகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 506 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment