நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் பாரிய குறைப்பாடுகள், தற்காலத்துக்கு ஏற்றதல்ல - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சாட்சியம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 29, 2020

நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் பாரிய குறைப்பாடுகள், தற்காலத்துக்கு ஏற்றதல்ல - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சாட்சியம்

(எம்.எப்.எம்.பஸீர்) 

நடை முறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் (தற்காலிக ஏற்பாடு) சட்டமானது, தற்காலத்தில், நவீன பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க போதுமான ஏற்பாடுகளை கொண்டதல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானியுமான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

அதனால் அந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் விதமாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்றினை (சி.டி.ஏ.) கொண்டுவர முயற்சிக்கப்பட்டதாகவும், எனினும் அது தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலமானது, தான் உள்ளிட்ட குழுவினரின் பரிந்துரைகள் பிரகாரம் வரையப்பட்ட சட்ட மூலத்தில் இருந்த பல விடயங்களை கொண்டிருக்கவில்லை எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

இவ்வாறான பின்னனியில் அந்த சட்ட மூலமும் கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் தினேஷ் குனவர்தனவினால் மீளப் பெறப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் விஷேடமாக நேற்று முன்தினம் இரவு ஆஜராகி சாட்சியம் வழங்கும் போதே அஜித் ரோஹன இந்த விடயங்களை வெளிப்படுத்தினார். 

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்று வருகின்றது. 

ஆணைக்குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ஜனக டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது. 

அதன்படி நேற்று முன்தினம் ஆணைக குழுவில் ஆஜரான அஜித் ரோஹனவிடம் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சாட்சியமளித்தார். 

அந்த சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு 'உண்மையில் சுதந்திரத்துக்கு முன்னர் 1947 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 25 ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் மட்டுமே ஆரம்பத்தில் எமக்கு பயங்கரவாதத்துக்கு எதிராக போராட இருந்த ஒரே சட்டமாகும். 

1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், அப்போதைய சூழலை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பாக துரையப்பாவின் கொலை, யாழில் பொலிஸ் அதிகாரிகளின் கடத்தல் கொலை போன்ற சம்பவங்களை மையப்படுத்தியே 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 

அது அக்காலத்தில் இருந்த சூழலுக்கு அமைய, அப்போதைய விடயங்களை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் சுதந்திரத்துக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்விரு சட்டங்களே பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்க கைவசம் உள்ள பிரதான சட்டங்களாகும். 

எனினும் தற்போது உலகில் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறும் முறைமை, விதத்தை ஆராயும் போது, எம்மிடம் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை வைத்துக்கொண்டு அவற்றுக்கு முகம் கொடுக்க முடியாது. அதில் பாரிய குறைபாடுகள் உள்ளன. இதற்கு உதாரணங்களை முன்வைக்கலாம். 

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில், பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் இல்லை. இது பிரதான குறைபாடு. அத்துடன் இந்த சட்டத்தின் மூலம் யாருக்கெல்லாம் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என ஆராயும் போது அங்கும் பாரிய குறைப்பாடுகள் உள்ளன. 

அதாவது பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவில், குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக செய்யப்படும் குற்றங்கள் என ஒரு வார்த்தை பிரயோகம் உள்ளது. அதற்கான விளக்கம், அச்சட்டத்தின் 31 ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது. 

அதில் ஜனாதிபதி, அனைத்து நீதிபதிகள், பிரதமர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஆணைக்குழுவொன்றில் உறுப்பினர்கள், ஜூரி சபை ஒன்றின் உறுப்பினர்கள், முப்படையினர், பொலிஸாருக்கு எதிராக செய்யப்படும் குற்றங்கள், அக்குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிப்போருக்கு எதிராக செய்யப்படும் குற்றங்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த முடியுமென்பதை 'குறித்த நபர்கள்' எனும் வார்த்தைப் பிரயோகத்துக்கு விளக்கமாக அவதானிக்க முடிகின்றது. 

எனினும் தற்காலத்தில், பயங்கரவாத நடவடிக்கைகள் சிவிலியன்களை இலக்காக கொண்டதாக காணப்படுகின்றன. அப்படியானால் பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணம் நடைமுறையில் உள்ள சட்டம் இல்லாமை பாரிய குறைபாடாகும். 

அத்துடன், அச்சட்டத்தில் உள்ள குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பெறும் விடயம், தடுப்புக் காவல் உள்ளிட்ட விடயங்கள் இலங்கை கையெழுத்திட்டுள்ள சர்வதேச இணக்கப்பாடுகளுடன் பாரிய முரண்பாடுகளை கொண்டுள்ளன. எனவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றுக்கான பாரிய தேவை உள்ளது. 

இவ்வாறான சூழலிலேயே கடந்த 2016 ஏப்ரல் 21 ஆம் திகதி அப்போதைய பிரதமரால், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றினை வரைய குழுவொன்று நியமிக்கப்பட்டது. அப்போதைய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாதுகப்பபு செயலாளர், சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் அலுவலக பிரதானி, முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர், முன்னாள் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசருமான யசந்த கோதாகொட உள்ளிட்டோர் அந்த குழுவில் இருந்தனர். 

அதில் பொலிஸ்மா அதிபரின் சார்பில் நானே அக்குழுவில் பங்கேற்றேன். சுமார் 28 தடவைகள் இக்குழு கூடி விடயங்களை ஆராய்ந்தது. அதன் பிரகாரம் நாம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றினை தயாரித்தோம். அதன்படி 2017 செப்டம்பர் 17 ஆம் திகதி அச்சட்ட மூலம் வர்த்தமாயில் பிரசுரிக்கப்பட்டது. பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. 

எனினும், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சட்ட மூலத்தில், நாம் இறுதியாக இணக்கத்துக்கு வந்து கையளித்த உத்தேச சட்ட மூலத்தில் இருந்த பல விடயங்கள் நீக்கப்பட்டிருந்தன. இது அந்த சட்ட மூலத்தை பலவீனபப்டுத்துவதாக இருந்தது. 

உதாரணமாக, தற்போது உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவி நிலை அதிகாரி ஒருவரிடம் கொடுக்கும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம், சாட்சியகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும். 

பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த வழக்குகளில் பொதுமக்கள் சாட்சியம் வழங்க முன்வருவது குறைவு. காரணம் அவர்கள் கண்டிப்பாக அச்சப்படுவர். எனவே குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்துக்கு சாட்சி அந்தஸ்து இருப்பது அவசியமாகும். எனவே நாம் புதிய சட்டத்தில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பொலிஸ் அத்தியட்சர் அல்லது சிரேஷ்ட அத்தியட்சர் ஒருவருக்கு வழங்கப்படல் வேண்டும் என பரிந்துரைத்த போதும், அந்த விடயம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சட்ட மூலத்தில் இருக்கவில்லை. 

உலக நாடுகல் பலவற்றிலும் பொலிசாருக்கு வழங்கும் வாக்கு மூலம் ஏற்றுக் கொள்ளப்படும் முறையிலான விடயங்கள் உள்ளன. பிரித்தானியாவில் பொலிஸ் கான்சிடபிள் ஒருவருக்கு வழங்கும் வாக்கு மூலம் கூட செல்லுபடியாகும். அதேபோல் தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 18 மாதங்களுக்கு தடுத்து வைத்து விசாரிப்பதற்கான காலத்தை பாதுகாப்பு அமைச்சரிடம் பெற்றுக் கொள்ள முடியும். 

எனினும் நாம் வரைந்த சட்டத்தில், அதனை 6 மாதங்களுக்கு மட்டுப்படுத்துமாறு கோரினோம். எனினும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சட்ட மூலத்தில் ஒருவரை 6 வாரங்கலே தடுத்து வைத்து விசாரிக்க சந்தர்ப்பம் இருந்தது. அதிலும் 14 நாட்கள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் பொறுப்பில் தடுப்புக் காவல் பெறவும் ஏனைய நாட்கள் நீதிவான் ஒருவரின் மேற்பார்வையில் இடம்பெறவுமே அதில் ஏற்பாடுகள் இருந்தன. அதேபோல், ஒருவரை கைது செய்த பின்னர் அது தொடர்பில் அவரது நெருங்கிய உறவினர்களுக்கும், மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கும் வண்ணமான ஏற்பாடுகள் புதிய உத்தேச சட்டத்தில் இருந்தன.' என தெரிவித்தார். 

இதன்போது ஆணைக்குழுவின் தலைவர் ஜனக் டி சில்வா, ஒருவரைக் கைது செய்ததும் அது தொடர்பில் உறவினருக்கு உடனடியாக அறிவிப்பது விசாரணைகளை பாதிக்கும் அல்லவா? என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, 'இல்லை. ஒருவரை கைது செய்துள்ளதாக அறிவிப்பது, அவ்விசாரணைகளை பாதிக்காது. நாம் உலக அளவில் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட மனித உரிமைகள் தொடர்பிலான, குறிப்பாக ஐ.சி.சி.பி.ஆர். போன்ற இணக்காப்பட்டு சட்டங்களுக்கு அமைய மக்களின் உரிமைகளை மதித்து நடப்பதை அவை உறுதி செய்யும். குறித்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதில் இருந்து அது பாதுகாக்கும். என தெரிவித்தார். 

இதனைவிட, குறித்த உத்தேச சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிமன்ற அதிகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாக சாட்சியமளித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, 2002 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இந்திய பயங்கரவாத தடைச் சட்டம், 2019 ஆம் ஆண்டு பிரித்தானியா அறிமுகம் செய்த பயங்கரவாத தடுப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு சட்டத்தில் உள்ள விடயங்களை தழுவி இலங்கையில் பயங்கரவாத தடை சட்டம் ஒன்று கொண்டுவரப்படுமாயின் அது சிறந்தது என சாட்சியமளித்தார். இது குறித்த மேலதிக சாட்சியங்கள் நேற்று இரவும் இடம்பெற்றன.

No comments:

Post a Comment