பஹ்ரைன் நாட்டின் பிரதமர் காலமானார் - உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

பஹ்ரைன் நாட்டின் பிரதமர் காலமானார் - உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்

உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் நாட்டின் பிரதமர் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா தனது 84 ஆவது வயதில் மரணம் அடைந்துள்ளார்.

பஹ்ரைன் சுதந்திரம் அடைந்த பின்பு 1971ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற இளவரசர் கலிஃபா அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

பஹ்ரைன் மன்னர் ஹமாதின் உறவினரான கலிஃபா அந்நாட்டு அரச குடும்பத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒருவராக இருந்தார்.

இவர் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மேயோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரதமர் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா இன்று (11) காலையில் காலமானார்.

அவர் காலமான செய்தியை பஹ்ரைன் அரண்மனை அறிவித்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மன்னர் தெரிவித்ததாக பஹ்ரைன் செய்தி நிறுவனம் கூறி உள்ளது. 

ஷேக் கலிபாவின் ஜனாஸா அமெரிக்காவில் இருந்து பஹ்ரைன் கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2011ஆம் ஆண்டு அரபு வசந்தம் என்று அழைக்கப்பட்ட போராட்டங்கள் அரபு நாடுகளில் நிகழ்ந்த பொழுது ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டக்காரர்களால் இளவரசர் கலிஃபா பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அரபு வசந்தம் "மரணங்கள் குழப்பங்கள் மற்றும் பேரழிவு" ஆகியவற்றையே கொண்டு வந்ததாக அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

சிறுபான்மையினரான சுன்னி இன முஸ்லிம்கள் ஆட்சியிலிருக்கும் பஹ்ரைன், அரபு வசந்தம் நடந்த நாட்களிலிருந்து ஷியா பெரும்பான்மை முஸ்லிம்களின் போராட்டங்களை சந்தித்து வருகிறது.

ஆட்சியிலிருக்கும் சுன்னி முஸ்லிம்கள் தங்களை பாகுபாடுகளுக்கு உள்படுத்துவதாக ஷியா முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அரசுக்கு எதிரான குழுக்கள் அனைத்தையும் கலைத்துள்ள பஹ்ரைன் அரசு சுயாதீன ஊடகங்கள் அந்நாட்டில் இயங்குவதற்கும் தடை விதித்துள்ளது.

இந்த ஒன்பது ஆண்டுகளில் முக்கியமான மனித உரிமைப் போராளிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கானவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுதாகவும், விதிகளை மீறி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஐந்து பேர் தீவிரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் தூக்கிலிடப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

No comments:

Post a Comment