ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற மிதக்கும் பாதையை பழுதுபார்க்கும் பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த இரண்டு பிரதேசங்களுக்கும் இடையிலான போக்குவரத்து அண்மைய சில நாட்களாக தடைப்பட்டிருந்தது. குறித்த விடயம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஆராயப்பட்டது.
இந்நிலையில், குறித்த மிதக்கும் பாதையின் இயந்திரத்தினை சீர் செய்வதற்கு தேவையான உபகரண பாகங்களை கொழும்பில் இருந்து எடுத்து வரப்பட்டு திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் சில தினங்களில் குறித்த பாதை மூலம் பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீவகங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பயணிகள் போக்குவரத்து படகு சேவைகள் அனைத்தையும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவத்தின் கீழ் செழுமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் ஊர்காவற்துறை - காரைநகர் இடையில் 500 மீற்றர் நீளமான பாலம் அமைப்பதற்கு சுமார் 1700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment