(காரைதீவு நிருபர் சகா)
இன்று வடக்கு கிழக்கில் மிக மோசமான முறையில் தமிழ் பேசும் மக்களது காணிகள் மிக வேகமாக அபகரிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. இதனை தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமைப்பட்டு எதிர்த்துப் போராட வேண்டும். அரசோடு ஒட்டியிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் காரைதீவில் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காரைதீவு பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்ட அமர்வில் கலந்துகொண்ட பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். கூடவே தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி உபசெயலாளர் அருள்.நிதாஞ்சன் முக்கியஸ்தர் ச.சுரேஷ்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
அவர் மேலும் கருத்துரைக்கையில் இன்று அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வரவுசெலவுத்திட்டத்தை ஆதரித்து நிறைவேற்றியுள்ளனர். உண்மையில் காரைதீவு என்று சொன்னால் ஒற்றுமைக்கான ஓர் அடையாளத்தை ஞாபகப்படுத்தும். இன்று அதனை நேரடியாகக் கண்ணுற்றேன். வாழ்த்துகள்.
முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக வாக்களித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். இந்த ஒற்றுமை இன்று வடக்கு கிழக்கிற்கு அவசியமாகின்றது. தமிழ் பேசும் மக்கள் இன்று காணி அபகரிப்புக்கு எதிராகப் போராட வேண்டியுள்ளது. தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டும்.
தமிழ் மக்கள் அன்று அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்டம் என்று பல கோணங்களில் நடத்தியிருந்தனர். அப்போது சிங்களவர்களால் சாதிக்க முடியாததை இன்று குடியேற்றத்திட்டம் மூலம் சாதிக்க முற்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் மயிலந்தமடு மாதவனை என்ற பிரதேசம் சோளப்பயிருக்காக வழங்கப்பட்ட காணிகள் இன்று நெல் விதைக்கப்படுவதாக பண்ணையாளர்களால் அறிய முடிகிறது. நேற்றிரவுகூட அங்கு கத்தி, வாள்கள், பொல்லுகள் சகிதம் வந்த சிலர் வந்து தங்களை உடனடியாக வெளியேறுமாறு கூறியிருந்தனராம்.
அங்கு திட்டமிட்டு சிங்களக் குடியேற்றம் பட்டப்பகலில் நடக்கிறது. இப்பிரதேச அரச அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்த வேண்டும். சில அதிகாரிகள் அதையிட்டு ஒன்றுமே செய்யாமலுள்ளனர். சிலவேளை முன்பிருந்த அரசாங்க அதிபருக்கு நடந்த கதி தமக்கும் நடக்குமோ என்று எண்ணி அவர்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்கலாம்.
இதேபோல திருமலை, வவுனியா போன்ற பிரதேசங்களிலும் காணி அபகரிப்பு நடைபெறுகிறது. வவுனியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஒரு சிங்கள அமைச்சர் கூறியிருந்தார். இந்த நாட்டில் எந்தவொரு இடத்திலும் சிங்களவர் வாழலாம் என்று.
நான் சொல்கிறேன் அது உண்மை. தனிச் சிங்களவர் இங்கு வந்து காணி வாங்கி வீட்டைக்கட்டி வாழலாம். அதற்கு யாரும் தடையில்லை. ஆனால் அரசாங்கத்தின் உதவியுடன் நூற்றுக்கணக்கில் சிங்களவர்களை மட்டும் கொண்டுவந்து எமது காணியில் பலவந்தமாக குடியேற்றுவதை அனுமதிக்க முடியாது. இது இனச்சுத்திகரிப்பாகும்.
இன்று ஆளும் கட்சிக்குப் பின்னால் இந்த கொங்கிறீட் பாதைகளுக்காக அலைந்து திரியும் எமது தமிழ் அரசியல்வாதிகள் இதனை எதிர்க்க வேண்டும். இன்றைய இந்த இக்கட்டான காலத்தில் அனைத்து தமிழ் உறுப்பினர்களும் ஒன்றுமைப்பட வேண்டும்.
அரசாங்கத்தில் இணைந்திருக்கும் தமிழ் உறுப்பினர்களும் இத்தகைய காணி அபகரிப்புக்கு எதிராக இணைய வேண்டும். நிதியிருந்தால் கொங்கிறீட் பாதையைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் காணியை இழந்தால் அனைத்தையும் இழப்போம்.
எனவே இன்றே அரசை விட்டு வெளியேற வேண்டும். அரசாங்கத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். நீங்கள் உண்மையிலே தமிழர்களாக இருந்தால் தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருந்தால் தமிழ்த் தாய்க்கு பிறந்திருந்தால் உடனடியாக அரசின் இந்த தமிழர் விரோத அநீதிக்கெதிராக குரல் கொடுத்து இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்.
பண்டாரநாயக்க, ஜேஆர்.ஜயவர்த்தனா, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோரால் குழப்பங்களை உருவாக்கி சாதிக்க முடியாமல் போனதை இந்த அரசாங்கம் வரும் 5 வருடங்களில் நிறைவேற்ற முற்படுவதையே காணலாம்.
தமிழர் தாயகம் என்று சொல்லப்படும் பிரதேசங்களில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை கடந்த காலஙகளில் செய்ய முடியாமல் போனதை ஒரு சவாலாக எடுத்து இன்றைய ஜனாதிபதி கோத்தபாய எதிர்வரும் 5 வருடங்களில் இதனை சாதிக்க முற்படுகிறார் என்றே நான் கருதுகிறேன். எனவே தமிழ் பேசும் மக்கள் இன்னமும் பிரிந்து நிற்காமல் ஒன்றிணைந்து போராட வேண்டும் வாருங்கள் என்றார்.

No comments:
Post a Comment