(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஷ்ணா)
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான திட்டமில்லை என மத்திய மற்றும் ஊவா மாகாண முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மைத்ரி குணரட்ன தெரிவித்தார்.
இன்று அட்டனில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது இன்று நாடு ஊரடங்கு தளத்தப்பட்டு திறந்து விடப்பட்டுள்ள போதிலும் மக்கள் அச்சம் காரணமாக வீதிகளுக்கு வர பயம் கொண்டுள்ளதை நான் கொழும்பிலிருந்து அட்டன் வரும் வழியில் காணக்கிடைத்தது.
கொரோனா தொற்றுக்கான மருந்துகள் இல்லை, பரிசோதனை இயந்திரம் இல்லை, முறையான திட்டமில்லை என சுகாதார அமைச்சின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். ஆகவேதான் தொழிலுக்கு செல்லாது வீடுகளுக்குளேயே இருக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
கொரொனா தொற்று முதன் முதலில் ஆரம்பித்த போது அரசாங்கம் விட்ட தவறே இன்று இவ்வளவு பாரதூரமான நிலைக்கு நாடு சென்றுள்ளது.
நாட்டின் வருவாயில் முக்கியமான விவசாயம், தேயிலை உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறை என்பன வீழ்ச்சியடைந்துள்ளன. நுவரெலியா மற்றும் தம்புள்ள பகுதிகளில் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குளாகியுள்ளனர். இங்கு உரிய விலைக்கு விற்க முடியாது விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல கொழும்பு பகுதிகளில் குறைந்த விலையில் மரக்கறிகளைப் பெற்றுக்கொள்ள முடியாது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்ட மக்களே அதிகளவில் கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் வேலை செய்கின்றார்கள்.
அவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு வருவோருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனுப்பப்படுகின்றனரா? அவ்வாறு வருவோரினூடாக தோட்டப் பகுதிகளில் கொரோனா தொற்றுப் பரவினால் பாதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆகவே கொரோனா தொற்று அச்சம் காணப்படும் பிரதேசங்கள் அல்லது நாடளாவிய ரீதியிலாவது இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மூடி இதற்கான முறையான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment