மருந்து நிறுவனங்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

மருந்து நிறுவனங்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு

தேர்தலில் எனக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பரங்கள் செய்தன என்று டொனால்ட் ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தி உள்ளார்.

உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3ம் திகதி நடந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன், தற்போதைய ஜனாதிபதியும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

270 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலே வெற்றி என்கின்ற நிலையில், ஜோ பைடன் 306 வாக்குகளை பெற்றார். ட்ரம்புக்கு 232 வாக்குகளே கிடைத்தது.

ஆனால் ட்ரம்ப் இன்னும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார்.

அந்த வகையில் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது, தனக்கு எதிராக முன்னணி மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்ததாக புதிய குற்றச்சாட்டை சுமத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது பெரிய மருந்து நிறுவனங்கள் எனக்கு எதிராக செயல்பட்டுள்ளன. எனக்கு எதிரான விளம்பரங்களுக்காக அவை கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளன. நான்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றேன். கிட்டத்தட்ட 7 கோடியே 40 லட்சம் வாக்குகளை நாங்கள் கண்டுபிடிப்போம்.

எங்களுக்கு எதிராக மருந்து கம்பெனிகள் செயல்பட்டன. ஊடகங்கள் எங்களுக்கு எதிராக இயங்கின. எங்களுக்கு எதிராக நேர்மையற்ற செயல்கள் நிறைய நடந்தன. இதுபோன்று நான் பார்த்ததே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து அமெரிக்க மக்களுக்கு மருந்துச் சீட்டுகளின் பேரில் வழங்கக் கூடிய மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கான விதிகளையும் அவர் அறிவித்தார். 

அப்போது அவர் கூறும்போது, “இதன் மூலம் நோயாளிகள் பலன் பெறுவார்கள். அவர்கள் மருந்துகளுக்கு அதிக விலை கொடுத்தார்கள். 51 ஆண்டுகளில் முதல் முறையாக மருந்துகளின் விலையை நாங்கள் குறைத்துள்ளோம். இதன் மூலம் 30 முதல் 50 சதவீதம் வரையில் மருந்து விலை குறையும்” என குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் அவர் நிருபர்களிடம் இருந்து எந்த கேள்வியையும் எதிர்கொள்ளவில்லை. அதே நேரத்தில் மருந்துகளின் விலைகளை குறைக்கும் விதிகளுக்கு மருந்து நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுபற்றி மருந்து நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீபன் உபல் கருத்து தெரிவிக்கையில், “விலைகளை நிர்ணயிக்க ஒரு தலைப்பட்சமாக அரசு நடவடிக்கை எடுக்கிறபோது, அது நோயாளிகள் சிகிச்சையை அணுகுவதை சீர்குலைக்கிறது. புதிய மருந்துகளில் முதலீடு செய்வதில் ஊக்கத்தை குறைக்கிறது. வேலை வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கும் அச்சுறுத்தல் ஆகும்” என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் பற்றி அவர் கூறும்போது, “தேர்தலை பொறுத்தமட்டில், அமெரிக்க மக்கள் தெளிவாக கூறி விட்டனர். கொள்கை வகுப்பாளர்கள் கொரோனா பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

No comments:

Post a Comment