தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்குமென நம்பவில்லை, அவர்களின் நலன்கள் குறித்து எதுவும் பெரிதாக உள்ளடங்கவில்லை : ராதாகிருஷ்ணன் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்குமென நம்பவில்லை, அவர்களின் நலன்கள் குறித்து எதுவும் பெரிதாக உள்ளடங்கவில்லை : ராதாகிருஷ்ணன் எம்.பி.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றால் பெருந்தோட்டங்களை நிருவகிக்கும் 22 நிறுவனங்கள் இணங்கினால் மாத்திரமே தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும். எனவே தேர்தல் பிரசாரமாக எவரும் இதனை முன்வைக்கலாம். ஆனால் ஆயிரம் ரூபாய் கிடைக்குமென நாம் நம்பவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இந்த அரசாங்கத்தினால் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக் கொடுத்தால் அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற ஒத்துழைப்புகளை அரசாங்கத்திற்கு வழங்குவோம் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார். 

மேலும், அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவு திட்டம் ஒட்டு மொத்த மக்களுக்கான வரவு செலவு திட்டமாகும். இந்நிலையில் நாடு முழுவதும் கொவிட்-19 வைரஸ் முழு சமூகத்தையும் பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையிலும் எமது மாவட்ட மலையக சமுதாய மக்கள் முழுமையாக தமது தொழிலை முன்னெடுத்து வருகின்றனர். 

நாட்டின் பொருளாதாரத்தை சமாளிக்கும் ஒரே தொழில் பெருந்தோட்ட தொழிலாகவே உள்ளது. ஆனால் இந்த வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நலன்கள் குறித்து எதுவும் பெரிதாக உள்ளடங்கவில்லை. பெருந்தோட்ட மக்களின் நிலைமைகள் குறித்தும் அவர்களின் வாழ்வாதாரங்கள் குறித்தும் எவரும் கவனம் எடுக்கவில்லை என்றார்.

ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினைகள் குறித்து மாத்திரம் பேசிவிட்டு அவர்களை ஒதுக்கிவிடாது அவர்களின் அடிப்படை பிரச்சினைகள், கல்வி, சுகாதார பிரச்சினைகள், பொருளாதார பிரச்சினை, பாதை அபிவிருத்தி குறித்தும் கவனம் செலுத்தியாக வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதேபோல், மலையகத்திற்கு பல்கலைக்கழகங்கள் அமைப்பது குறித்து பேசப்பட்டு வருகின்றது. இதில் நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைக்க பழைய கட்டிடம் இருந்தால் பாருங்கள் என பிரதமர் கூறினார். இது நல்ல திட்டமில்லை, மலையகத்திற்கு புதிய பல்கலைக்கழகங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் மலையக கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment