பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டாலும் அவை கம்பனிகளை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது - மக்கள் தொழிலாளர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டாலும் அவை கம்பனிகளை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது - மக்கள் தொழிலாளர் சங்கம்

(க.பிரசன்னா) 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டாலும் அவை கம்பனிகளை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது எனவும் எனவே குறைந்தபட்ச கூலிகள் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குறைந்தபட்ச கூலிகள் சட்டத்தில் அடிப்படைச் சம்பளம் 400 ரூபாவாகவும் மாதாந்த சம்பளம் 10,000 ரூபாவுக்கும் குறையாமல் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக மாற்றி திருத்தத்தை கொண்டுவருவதனூடாகவும் ஏனைய கொடுப்பனவுகள் அதிகரிப்பதனூடாகவும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பை பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவாக மாற்றியமைக்கும்போது தொழிற்சங்கங்கள் 1000 ரூபாவுக்கும் அதிகமான தொகையினை அடிப்படைச் சம்பளமாக முன்வைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். அத்தொகையிலிருந்து குறைந்த தொகையை வேதனமாக வழங்க முடியாது. கைத்தொழில் பிணக்குச் சட்டத்தின்படி, சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளத்தை விட குறைந்த தொகையினை தொழிலாளர்களுக்கு வழங்க முடியாது.

எனவே இச்சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவருவதற்கு மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முயற்சிக்க வேண்டும். குறைந்தபட்சம் இச்சட்டத்தை கூட நிறைவேற்ற முடியாவிட்டால் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதில் எவ்வித பயனும் இல்லை.

அரசாங்க உத்தியோகத்தர்கள் தங்களது பதவியிலிருந்து ஓய்வு பெறும் வரை 10 சம்பளவுயர்வுகள் காணப்படும். ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவ்வாறில்லை. 1000 ரூபா சம்பளக் கோரிக்கை 2014 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. அதன் பின்னரான 6 வருடங்களில் மூன்று கூட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தற்போதும் அதே 1000 ரூபாவை கோருவதை ஏற்க முடியாது.

தற்போது அரசாங்கம் கம்பனிகளுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியிருக்கிறது. இவ்வாறு அரசாங்கத்திடம் சலுகைகளை பெற்றுக் கொள்ளும் கம்பனிகளுக்கு அழுத்தத்தை வழங்கி 1000 ரூபா நாட்சம்பள அதிகரிப்புக்கு வழியேற்படுத்த அரசாங்கத்துக்கு முடியும். அல்லது தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால் தொழிலாளர்களுக்கு எவ்வாறு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென்ற கேள்வி எழும். அதன்போது புதிய முறைமைக்குள் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். 

தற்போதைய கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறினாலும் பழைய கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தொழிலாளர்களுக்கு ஊதியங்கள் கிடைக்கப் பெறும் அவற்றில் எந்த சிக்கலும் ஏற்படாது.

தற்போது வரவு செலவுத் திட்டத்தில் 1000 ரூபா வழங்குவதற்கு முன்மொழியப்பட்டாலும் அதற்கான பொறிமுறை எவையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அரசாங்கத்துக்கு பிரதான வருமானம் தேயிலை ஏற்றுமதியிலிருந்தே கிடைக்கப் பெறுகின்றது. 

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மூலம் கிடைக்கும் வருமானம் தற்போது வெகுவாக குறைவடைந்துள்ளது. எனவே இவற்றை சாதகமாக பயன்படுத்தி கம்பனிகளுக்கு அரசாங்கத்தால் அழுத்தத்தை வழங்க முடியும். வரவு செலவுத் திட்டத்தில் 1000 ரூபா வழங்குவதற்கு முன்மொழியப்பட்டாலும் அது கம்பனிகளை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment