அசர்பைஜானுடனான போரில் அர்மீனிய வீரர்கள் 2,317 பேர் பலி - தங்கள் வீடுகளுக்கு தீ வைத்து வெளியேறி வரும் மக்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 15, 2020

அசர்பைஜானுடனான போரில் அர்மீனிய வீரர்கள் 2,317 பேர் பலி - தங்கள் வீடுகளுக்கு தீ வைத்து வெளியேறி வரும் மக்கள்

நகோர்னோ - கராபாத் மாகாணத்தை மையமாக கொண்டு நடந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வியடைந்தது.

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ - கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. 

இந்த மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்கள் ஆகும். 

1994ம் ஆண்டு நகோர்னோ - கராபத் மாகாணத்தை மையாமாக வைத்து இரு நாடுகளும் இடையே நடந்த போரில் மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. 

இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர். நகோர்னோ - கராபத் மாகாணத்திற்கு என தனியாக பாதுகாப்பு படைப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த தன்னாட்சி பகுதிக்கு அர்மீனிய அரசும் உதவிகளை செய்துவந்தது. 

அன்றில் இருந்து நகோர்னோ - கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது. பல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கியது.

தங்கள் வசம் இருந்த நகோர்னோ - கராபத் மாணத்தை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு கடந்த செப்டம்பர் மாதம் 27ம் திகதி அசர்பைஜான் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. 

இந்த தாக்குதலுக்கு நகோர்னோ - கராபத் மாகாணத்தில் இருந்த படையினர் பதிலடி கொடுத்து வந்தனர். நகோர்னோ - கராபத் மாகாண படையினருக்கு அர்மீனியா ஆதரவு அளித்ததால் இந்த சண்டை அர்மீனியா - அசர்பைஜான் இடையே நேரடி போரை உருவாக்கியது.

கடந்த சில வாரங்களாக கடுமையாக நடந்த போரில் நகோர்னோ - கராபத் மாகாணத்தில் உள்ள முக்கிய மற்றும் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுஷா என்ற நகரை அசர்பைஜான் படைகள் கைப்பற்றியது. இதையடுத்து, போரில் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அசர்பைஜான் அறிவித்தது. 

இதை தொடர்ந்து, அர்மீனியா - அசர்பைஜான் இடையே ரஷியா முன்னிலையில் கடந்த 10ம் திகதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 

ரஷிய ஜனாதிபதி புதின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்த இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அர்மீனிய பிரதமர் நிக்கோல் பஷின்யான் மற்றும் அசர்பைஜான் ஜனாதிபதி இப்ஹாம் அலியவ் தரப்பும் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டன. 

மேலும், தாங்கள் கைப்பற்றிய நகோர்னோ - கராபத் மாகாணத்தின் முக்கிய பகுதிகளை அசர்பைஜான் தங்கள் வசமே வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் பல வாரங்களாக நடந்த போரில் அர்மீனியா தோல்வியடைந்து அசர்பைஜான் வெற்றி பெற்றதாகவே தெரியவந்துள்ளது. 

போர் முடிவுக்கு வந்ததையடுத்து, அசர்பைஜான் கைப்பற்றிய நகோர்னோ - கராபத் மாகாணத்தில் இருந்து அர்மீனிய ஆதரவு மக்கள் வெளியேறி வருகின்றனர். பல ஆண்டுகளாக வசித்து வந்த தங்கள் நிலத்தில் இருந்து அம்மக்கள் தஞ்சம் தேடி அர்மீனியா நாட்டுக்கு செல்கின்றனர். அசர்பைஜானிடம் நிலப்பரப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதால் பல ஆண்டுகளாக வசித்து வந்த தங்கள் வீடுகளை தீ வைத்து கொளுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அசர்பைஜானுடனான மோதலின்போது தங்கள் நாட்டு வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை போரில் தோல்வியடைந்த அர்மீனியா வெளியிட்டுள்ளது.

அர்மீனிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, போரால் தங்கள் தரப்பு படையினர் 2 ஆயிரத்து 317 பேர் (அடையாளம் கண்டுகொள்ள முடியாதவர்கள் உட்பட) உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

அதேவேளை அசர்பைஜான் - அர்மீனிய போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான தகவல்களை ரஷிய ஜனாதிபதி புதினும் தெரிவித்துள்ளார். இந்த போரில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 8 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்கள் போரால் இடம்பெயர்ந்துள்ளதாவும், அவர்களது வீடுகள், பண்பாட்டு தளங்கள் இந்த போரால் அழிக்கப்பட்டுள்ளதாகவும் புதின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment