யாழ். சுழிபுரம் இரட்டைக் கொலை - 21 பேரில் 12 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Saturday, November 14, 2020

யாழ். சுழிபுரம் இரட்டைக் கொலை - 21 பேரில் 12 பேர் கைது

யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்து இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 பேரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் நேற்றுமுன்தினம் (13) வெள்ளிக்கிழமை மாலையளவில், மரணமடைந்த குறித்த நபர்கள் இருந்த இடத்திற்கு வந்த 21 பேர், அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், DIG அஜித் ரோஹண தெரிவித்தார்.

இம்மோதல் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சின்னவன் செல்வம் (55) மற்றும் இராசன் தேவராசா (32) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் (14) மல்லாகம் நீதவானினால் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டதோடு, பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு நேற்று முன்தினமும் ஏற்பட்டுள்ளது. மாலை இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறும் சூழல் காணப்பட்ட போது அயலவர்களால் இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டனர்,

பின்னர் பின்னிரவு நேரம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

அதில் சின்னவன் செல்வம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார், மற்றையவரான இராசன் தேவராசா (32) சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த 21 பேரில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களை இன்றையதினம் (15) மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad