2019 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை வெட்டுப் புள்ளியில் பாரிய அநீதி - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

2019 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை வெட்டுப் புள்ளியில் பாரிய அநீதி - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

(நா.தனுஜா)

2019 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்வதில் பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியிருக்கிறது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவிற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரத்கரவே ஜீவரத்ன தேரரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்வதில் பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுமே உயர் கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களாவர். எனினும் அரச பல்கலைக்கழகங்களின் வரையறுக்கப்பட்ட தன்மை காரணமாக நீண்ட காலமாகவே குறித்தளவான மாணவர்களே அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகின்றனர்.

2019 ஆம் ஆண்டில் சுமார் 181,000 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த போதிலும், சுமார் 40,000 மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். எனவே எஞ்சிய 141,000 மாணவர்களுக்கு உயர் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கை 10 ஆயிரத்தினால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நீங்கள் கூறியிருப்பினும், அது நம்பக்கூடியதாக இல்லை. ஏனெனில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரித்திருந்தால், அதற்காக ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்ட வளங்களின் அளவிலும் அதிகரிப்பு ஏற்பட வேண்டும்.

ஆனால் 2020 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டதை விடவும் 40 பில்லியன் ரூபா குறைவாகவே 2021 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் வெட்டுப் புள்ளியின் அடிப்படையில் பாதிப்பை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதுபற்றி கலந்துரையாடுவதற்கு எமக்கு சந்தர்ப்பமளிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad