ஜனாதிபதியின் வருட பூர்த்தியை கொண்டாட பாற்சோறு சமைக்க அரிசி இல்லை : அரசாங்கம் 2000 பில்லியனை கடனாக பெற்றுள்ளது, வட்டியை செலுத்த நாட்டு மக்களின் பணமே பயன்படுத்தப்படும் - எஸ்.எம். மரிக்கார் - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

ஜனாதிபதியின் வருட பூர்த்தியை கொண்டாட பாற்சோறு சமைக்க அரிசி இல்லை : அரசாங்கம் 2000 பில்லியனை கடனாக பெற்றுள்ளது, வட்டியை செலுத்த நாட்டு மக்களின் பணமே பயன்படுத்தப்படும் - எஸ்.எம். மரிக்கார்

(செ.தேன்மொழி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஒரு வருட பதவி பூர்த்தியாகும் நிலையில் அதனை கொண்டாடுவதற்கு நாட்டு மக்களால் பாற்சோற்றை தயாரிப்பதற்காக அரிசியைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .எம். மரிக்கார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியமைத்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. எனினும் நாடு பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றது. கொரொனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ளதுடன், பாரிய பொருளாதார வீழ்ச்சி, விவசாயத்துறை உட்பட அனைத்த துறைகளும் பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில், கொழும்பில் மாத்திரம் 5 வீதமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்க கூடும் என சுகாதார பிரிவினர் கூறுகின்றனர். சிலர் வீடுகளிலேயே உயிரிழக்கின்றனர். கல்வி நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன. இவ்வாறான நிலைமையிலே, ஜனாதிபதியின் பதவி பூர்த்தியை முன்னிட்டு மக்களால் பாற்சோறு சமைத்து கொண்டாடுவதற்கு அரிசியை கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

வாடகை வாகன ஓட்டுனர்கள் உட்பட சுய கைத்தொழிலாளர்கள் வாங்கிய கடனையேனும் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். முடக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்காக வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணப் பணம் இன்னமும் வழங்கப்படாத பகுதிகளும் காணப்படுகின்றன.

இதேவேளை, எரிபொருள் விலை தற்போது அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் இந்த எரிபொருள் விலை பாரிய அளவில் குறைவடைந்திருந்தது. அந்த காலப்பகுதியில் எமது நாட்டிற்கு ஒரு வருட காலத்திற்கு தேவையான எரிபொருட்களை கொள்வனவு செய்து வைத்திருந்தால் 3.7 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை சேமித்து வைக்கக்கூடியதாகவிருந்திருக்கும்.

2015 ஜனவரி தொடக்கம் 2019 டிசம்பர் வரையிலும் 5,600 பில்லியன் ரூபாவையே அரசாங்கம் கடனாக பெற்றிருந்தது. எனினும் இந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் தற்பேதைய அரசாங்கம் 2000 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுக் கொண்டுள்ளது. எதிர்வரும் வருடத்தில் 4000 தொடக்கம் 5000 பில்லியன் ருபாய் வரை இந்த கடன் தொகை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் நாடு என்ற வகையில் நாம் எவ்வாறு வளர்ச்சி அடைய முடியும்.

எதிர்வரும் காலங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் ஊடாக எமக்கு கடனை பெற்றக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அதிக வட்டிக்கே கடன்களை பெற வேண்டிய நிலைமை ஏற்படும். 

இதன்போது கடன்களுக்கான வட்டியை செலுத்துவதற்கு நாட்டு மக்களின் பணமே பயன்படுத்தப்படும். இதனால் நாட்டு மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும். தற்போது வைரஸ் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கல்வித்துறை பெரிதும் பாதிப்படைந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad