அறிகுறிகளற்ற தொற்றாளர்களிடமிருந்து 14 நாட்களின் பின்னர் பிரிதொருவருக்கு வைரஸ் தொற்றாது, பி.சி.ஆர். பரிசோதனையும் முன்னெடுக்கப்படமாட்டாது - விசேட வைத்தியர் சுதத் சமரவீர - News View

About Us

About Us

Breaking

Sunday, November 8, 2020

அறிகுறிகளற்ற தொற்றாளர்களிடமிருந்து 14 நாட்களின் பின்னர் பிரிதொருவருக்கு வைரஸ் தொற்றாது, பி.சி.ஆர். பரிசோதனையும் முன்னெடுக்கப்படமாட்டாது - விசேட வைத்தியர் சுதத் சமரவீர

(எம்.மனோசித்ரா)

அறிகுறிகள் எவையுமின்றி இனங்காணப்படும் தொற்றாளர்கள் இடைநிலை பராமறிப்பு நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் வீடு செல்லும் போது அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

சனிக்கிழமை விசேட அறிவித்தலொன்றின் மூலம் இதனைத் தெளிவுபடுத்திய அவர் மேலும் கூறுகையில், அண்மையில் எமது நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் மற்றும் வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பபடும் நடைமுறைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை தொடர்பில் சமூகத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதுவரையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தற்போது அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். எனினும் ஏதேனுமொரு காரணத்தினால் வீடுகளில் தனிமைப்படுத்தலில் ஈடுபட முடியாதவர்கள் காணப்பட்டால் அவர்கள் நிச்சயம் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் முன்னெடுப்பதைப் போன்றே வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கும் ஆரம்ப கட்டத்தில் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படுவதோடு, தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைவதற்கு முன்னரும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.

இதேபோன்று தொற்றாளர்களை வைத்தியசாலைகளிலிருந்து வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கைகளிலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அறிகுறிகள் எதுவும் இன்றி தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்கள் வைத்தியசாலைகளில் இன்றி இடைநிலை பராமறிப்பு நிலையங்களிலேயே தங்க வைக்கப்படுகின்றனர். 14 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

கடந்த நாட்களில் சிகிச்சைக்குப் பின்னர் இரு தடவைகள் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படும். எனினும் இடை நிலை பராமறிப்பு நிலையங்களில் உள்ளவர்களுக்கு சிகிச்சையின் பின்னர் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட மாட்டாது. 

உலக மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் அறிகுறிகளற்ற தொற்றாளர்களிடமிருந்து 10 தொடக்கம் 14 நாட்களுக்கு பின்னர் பிரிதொருவருக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவேதான் அறிகுறிகளற்ற தொற்றாளர்களை சிகிச்சையின் பின்னர் வீட்டுக்கு அனுப்பும் போது பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் மீண்டும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்படுவார்கள்.

கொவிட் தொற்று ஏற்படுவதற்கான பிரதான காரணம் தனி நபர்களுக்கிடையிலான தொடர்புகளாகும். எனவேதான் அனைவரையும் வீடுகளிலேயே இருக்குமாறும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் வருமாறும் அறிவுறுத்துகின்றோம்.

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை காணப்படும். அவ்வாறானவர்களுக்கு வைத்தியசாலைகளால் வீடுகளிலேயே நேரடியாக மருந்து வழங்கப்படும். தபால் திணைக்களத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எனவே நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு வரத் தேவையில்லை. அவ்வாறான நோய்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து கிடைக்காவிட்டால் அவர்களது வீடுகளில் உள்ள ஆரோக்கியமான இளைஞர்கள் அல்லது வேறு யாரேனும் இருந்தால் அவர்கள் வைத்தியசாலைக்கு வந்து மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியும். என்றார்

No comments:

Post a Comment