ரிஷாத்துடன் அரசாங்கம் எந்தவித அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை, நாட்டு மக்களின் நம்பிக்கையை வீணாக்கமாட்டேன் - ஜனாதிபதி கோட்டாபய - News View

About Us

About Us

Breaking

Sunday, October 4, 2020

ரிஷாத்துடன் அரசாங்கம் எந்தவித அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை, நாட்டு மக்களின் நம்பிக்கையை வீணாக்கமாட்டேன் - ஜனாதிபதி கோட்டாபய

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுடன் எந்தவொரு அரசியல் தொடர்புகளையும் தமது அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முதலாவதும் முக்கியமானதுமான பொறுப்பாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதனை உறுதிப்படுத்தும் வகையில் இப்போதும் உரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று நபர்களை கைது செய்வது அல்லது தன்னிச்சையாக விடுதலை செய்வதற்கான அதிகாரத்தை அரசியல்வாதிகளின் கைகளில் கொடுப்பதற்கு தாம் தயாரில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தமது முகநூலில் இதனைப் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது அரசாங்கத்தின் முதலாவதும் முக்கியமானதுமான பொறுப்பாகும். அதை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் இன, மத அல்லது வேறு எவ்வித மான பயங்கரவாதத்திற்கோ அல்லது அடிப்படைவாதத்திற்கோ இடமளிப்பதில்லை.

அனைத்து பிரஜைகளும் பயம், சந்தேகமின்றி வாழக்கூடிய உரிமையை பாதுகாப்பதை உறுதிப்படுத்துகின்றோம்.

2019 ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாதுகாப்புத் துறையில் நிலவிய பாரிய வீழ்ச்சியே காரணம். பயங்கரவாதம் அல்லது அடிப்படை வாதத்திற்குத் துணை போகின்ற அரசியல் மற்றும் சமூக பின்னணி நாட்டிற்குள் உருவாக்கப்பட்டிருந்தமையும் அதற்கு ஒரு காரணமாகும்.

அந்த வகையில் பயங்கரவாதமோ அல்லது அடிப்படை வாதமோ பலப்படுத்தப்படுகின்ற அனைத்து வழிகள் மற்றும் செயற்பாடுகளை துடைத்தெறிவதற்கு எமது அரசாங்கம் பின்நிற்க மாட்டாது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அத்துடன் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த விசாரணைகளுக்கு இணங்க கடுமையான சட்டம் பிரயோகிக்கப்படும்.

குறிப்பிட்ட அதிகாரிகளினால் ஏதாவது தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவை நிவர்த்தி செய்யப்படும். ரிஷாட் பதியுதீன் எம்.பியுடன் எந்த அரசியல் 'டீல்'களும் எமது அரசாங்கத்திற்கு கிடையாது.

மக்கள் இதுவரை எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட மாட்டேன்.

எதிர்காலத்தில் அந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் வகையில் செயற்படுவேன் என மக்களுக்கு உறுதியளிக்கின்றேன் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment