கம்பஹா, திவுலபிட்டியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் 16 வயதுடைய மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி, திவுலபிட்டியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய பெண்ணொருவர் வேலை செய்துகொண்டிருந்த வேளையில் சுகயீனமடைந்ததை தொடர்ந்து, கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இம்மாதம் முதலாம் திகதி PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த பெண், கடந்த இரண்டாம் திகதி வீடு திரும்பியிருந்தார். இப்பரிசோதனையின்போது அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் தந்தை, கணவர் மற்றும் 4 பிள்ளைகள் ஹபாரதுவவிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, குறித்த பெண்ணின் மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் மகள், IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment