எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்று இரண்டாம் கட்டமாக அடையாளம் காணப்பட்ட பதினாறு நபர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டது.
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமை தொடர்பில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் உயர்மட்ட மாநாடு இன்று (26) திங்கட்கிமை இடம்பெற்றது.
குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தலிலுள்ள வீடுகளுக்கு வெளியில் பூட்டு போட்டு வைத்தல், வெளியில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்புதல், மரண வீடுகளில் நல்லடக்கத்தில் 15 பேர் மாத்திரம் கலந்து கொள்ளல், திருமணங்களை மறு அறிவித்தல் வரை பிற்போடல், ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் ஐந்து பேர் கொண்ட குழு நியமித்து கண்காணிப்பில் ஈடுபடல், பிரதேச சபையால் பெறப்படும் குப்பைகள் பைகளில் இடப்பட்டு வீதியோரமாக வைத்து விடல், கொரோணா தொற்று தொடர்பான கண்காணிப்பு தொடர்பில் பொலிஸாருடன் இணைந்து நியமிக்கப்பட்ட குழு நடவடிக்கை எடுத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அத்தோடு, கொரோனா தொற்றுள்ளவர்களுடன் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர்கள் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமைகள் இன்னும் மோசமடையும் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டோர் தொகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதற்கு பொதுமக்கள் அதிகாரிகளுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் கோரப்பட்டது.
மேலும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் நடவடிக்கையெடுக்க நேரிடுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌபர், கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனைப் பிரதேசத்திற்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜெயசுந்தர, கல்குடா உலமா சபைத் தலைவர் ஏ.எல்.எம்.இஸ்மாயில், பிரதேச சபை உறுப்பினர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வர்த்தக சங்கங்களின் தலைவர்கள், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment