உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரயில் சேவைகள் தவிர பிரதான ரயில் பாதையில் புத்தளம் பாதை, களனிவெளி பாதை மற்றும் அனைத்து அலுவலக ரயில்களினதும் பயணிகளுக்கான சேவைகள் இன்று (26) தொடக்கம் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டை பொலிஸ் எல்லை பகுதிக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமையால், அனைத்து தூர இடங்களுக்கான ரயில் சேவைகளும், நகரங்களுக்கிடையிலான ரயில் சேவைகளும் இன்று தொடக்கம் மீண்டும் அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து இரவு தபால் ரயில் சேவைகளும் நேற்று தொடக்கம் மீண்டும் அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கரையோர ரயில் பாதையில் 6 ரயில் சேவைகள் மாத்திரம் இன்று தொடக்கம் சேவையில் ஈடுபடும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில்கள் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் மாத்திரம் பயணிகளை ஏற்றி வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக ஒரு ரயில் காலி ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.15 க்கும், சாகரிக்கா ரயில் பெலியத்தை ரயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.30 க்கும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையம் வரையிலான பயணத்தை ஆரம்பித்தது. சமுத்திரா தேவி ரயில் காலி ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 5.00 மணிக்கு புறப்பட்டதாகவும் ரயில்வே திணைக்கள கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கரையோர ரயில் பாதையில் 3 ரயில்கள் இன்று மாலை சேவையில் ஈடுபடும். இந்த ரயில்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கொள்ளுப்பிட்டி ரயில் நிலையம் வரையில் பயணிகள் அற்ற நிலையில் சென்று அங்கிருந்து பயணிகளுடன் புறப்படும்.
இதற்கமைவாக சாகரிக்கா ரயில் மாலை 4.40 க்கு பெலிஹத்த வரையிலும், சமுத்திரா தேவி ரயில் மாலை 5.25 க்கு காலி வரையிலும் செல்லவுள்ளன.
மாலை 6.10 க்கு கொள்ளுப்பிட்டியில் இருந்து காலி வரையில் மற்றுமொரு ரயில் செல்லவுள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக விசேட 12 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பிரதான ரயில் பாதைகளில் 8 ரயில்களும், சிலாபம் ரயில் பாதையில் 4 ரயில்களும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதான ரயில் பாதையில் ரயில் ஒன்று காலை 5.25 க்கு ரம்புக்கணையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணத்தை ஆரம்பித்துள்ளது. மற்றுமொரு ரயில் இன்று காலை 5.25 க்கு பொல்காவலையில் இருந்து கொழும்பு கோட்டை நேக்கி புறப்பட்டதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலை 4.50 க்கு சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி மற்றுமொரு ரயில் சேவையில் ஈடுபட்டுள்ளது. காலை 5.41 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி ரயில் ஒன்று சேவையில் ஈடுபட்டுள்ளது. காலை 11.17 க்கு சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு மற்றுமொரு ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று ரயில் ஒன்று நண்பகல் 12.45 க்கு ரம்புக்கணையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், பிற்பகல் 1.25 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கணை வரையிலும் சேவையில் ஈடுபடவுள்ளது.
மாலை 3.45 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து மற்றுமொரு ரயில் பொல்காவலையை நோக்கி செல்லவுள்ளது. மாலை 4.50 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கணை வரையில் மற்றுமொரு ரயில் சேவையில் ஈடுபடவுள்ளது. இதேபோன்று 4.25 க்கு ரம்புக்கணையில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் மற்றுமொரு ரயில் சேவையில் ஈடுபடவுள்ளது.
மாலை 4.30 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் வரையில் ரயில் ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அனைத்து ரயில்களும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று அளுத்கம - காலி, காலி – பெலிஹத்த, பொல்காவல – மஹாவ மற்றும் நாவலப்பிட்டி பிரிவிலும், அநுராதபுர பிரிவிலும் அனைத்து குறுந்தூர ரயில் சேவைகளும் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment