இலங்கையில் எரிபொருளுடன் தொடர்புடைய உற்பத்தி, கைத்தொழிலை விரிவுபடுத்த அவசியமான தொழில்நுட்ப உதவிகள், ஒத்துழைப்புக்களை வழங்க ஈரான் தயார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 14, 2020

இலங்கையில் எரிபொருளுடன் தொடர்புடைய உற்பத்தி, கைத்தொழிலை விரிவுபடுத்த அவசியமான தொழில்நுட்ப உதவிகள், ஒத்துழைப்புக்களை வழங்க ஈரான் தயார்

(நா.தனுஜா) 

இலங்கையில் எரிபொருளுடன் தொடர்புடைய உற்பத்தி மற்றும் கைத்தொழிலை மேலும் விரிவுபடுத்துவதற்கு அவசியமான தொழில்நுட்ப உதவிகள், ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்திருக்கிறது. 

ஈரானியத் தூதுவர் ஹசீம் அஷ்ஜசாடே இன்று புதன்கிழமை கொழும்பில் அமைந்துள்ள கைத்தொழில் அமைச்சில் அமைச்சர் விமல் வீரவன்சவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதன்போது இலங்கையில் எரிபொருள் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு அவசியமான தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தமது அரசாங்கமும் முதலீட்டாளர்களும் தயாராக இருப்பதாக தூதுவர் அமைச்சரிடம் உறுதியளித்தார். 

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, ஈரான் உலகின் முன்னணி எரிபொருள் விநியோகஸ்தராக விளங்கும் அதேவேளை எரிபொருள்சார் கைத்தொழில்களில் மிகவும் விரிவான அனுபவத்தைக் கொண்ட நாடாகவும் உள்ளது. எனவே இலங்கையில் எரிபொருளுடன் தொடர்புடைய கைத்தொழில்களை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஈரானியத் தூதுவரிடம் கேட்டுக் கொண்டார். 

மேலும் ஐக்கிய அமெரிக்காவின் செயற்பாடுகளின் காரணமாக ஈரானிய மக்கள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கவலை வெளியிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, அவ்வாறிருப்பினும்கூட கடினமான சூழ்நிலைகளின் போது ஈரான் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தமைக்கு தனது நன்றியையும் வெளிப்படுத்தினார். 

அத்தோடு இலங்கையில் அரச அல்லது தனியார் துறையுடன் ஒன்றிணைந்து எரிபொருள் கைத்தொழிலை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புக்களை ஈரானிய முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் இலங்கை கொண்டிருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் அந்நாடுகளினால் இலங்கையில் பல்வேறு கைத்தொழில்களுக்குமான முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதை உதாரணமாக சுட்டிக்காட்டிய ஈரானியத் தூதுவர் ஹசீம் அஷ்ஜசாடே, அதனைப்போன்று இலங்கை - ஈரான் ஆகிய நாடுகள இணைந்து எரிபொருள்சார் கைத்தொழிலை முன்னெடுப்பதுடன் அந்த உற்பத்தியை 'இலங்கையின் தயாரிப்பு' என்ற சான்றுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியும் என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment