அரசாங்கம் மக்களின் கஷ்ட நிலைமையை உணராமல் 20 ஆவது திருத்தத்தை அனுமதித்துக் கொள்ளும் முயற்சியையே மேற்கொள்கிறது - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 14, 2020

அரசாங்கம் மக்களின் கஷ்ட நிலைமையை உணராமல் 20 ஆவது திருத்தத்தை அனுமதித்துக் கொள்ளும் முயற்சியையே மேற்கொள்கிறது

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

நாட்டின் தற்போதைய அசாதாரண நிலையிலும் மதத் தலைவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தை அனுமதித்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், அது தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேய இவ்வாறு குறிப்பிட்டார். 

நாடு கொவிட் தொற்றுக்கு இலக்காகி மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில் அன்றாடம் கூலி தொழில் செய்து வருபவர்கள் வீடுகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியில் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களின் நாளாந்த செலவுக்காக கையில் பணம் இல்லாமல் செய்வதறியால் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் அரசாங்கம் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான நிவாரண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 

ஆனால் அரசாங்கம் மக்களின் கஷ்ட நிலைமையை உணர்ந்து கொள்ளாமல் 20 ஆவது திருத்தத்தை அனுமதித்துக் கொள்ளும் முயற்சியையே மேற்கொண்டு வருகின்றது. 

நாடு முகம்கொடுத்து வரும் அசாதாரண நிலைமையில் 20 ஆவது திருத்தத்தை அனுமதித்துக் கொள்ளும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுவது எந்தளவுக்கு நியாயமானது என்பதை அரசாங்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment