எக்காரணம் கொண்டும் முழு நாடும் முடக்கப்படமாட்டாது - அனுவபம் வாய்ந்த நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர் - உலக சுகாதார ஸ்தாபனம் சுகாதார அமைச்சை தயார்படுத்துமாறு அறிவுரை - News View

About Us

About Us

Breaking

Friday, October 23, 2020

எக்காரணம் கொண்டும் முழு நாடும் முடக்கப்படமாட்டாது - அனுவபம் வாய்ந்த நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர் - உலக சுகாதார ஸ்தாபனம் சுகாதார அமைச்சை தயார்படுத்துமாறு அறிவுரை

முழு நாடும் மீண்டும் முடக்கப்படாது. உலகில் ஏனைய நாடுகளை விட கொவிட்-19 வைரஸை ஒழிப்பதில் வினைத்திறன்மிக்க வகையில் உலகளாவிய அனுபவங்களையும் சுகாதாரத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டே அரசாங்கம் செயற்படுகிறதென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

அத்துடன், விரைவில் கொவிட்-19 வைரஸுக்கான தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியளிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அதனைப் பெற்றுக் கொள்ள சுகாதார அமைச்சை தயார்படுத்துமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் எமக்கு தெரியப்படுத்தியுள்ளதென்றும் அவர் கூறியுள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கொவிட் வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், கொவிட் வைரஸ் ஒழிப்புக்கான சுகாதாரதுறைசார் ஊழியர்களும் பாதுகாப்புப் படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். அதேபோன்று ஏனைய துறைசார் நிறுவனங்களும் அதிகாரிகளும் ஊழியர்களும் இந்த பணியில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமைத்துவம் பலமானதாக உள்ளதால் நாம் மோசமான நிலையில் இல்லை. கொவிட் ஒழிப்புகாக இராணுவத் தளபதி தலைமையில் செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் உட்பட பாதுகாப்பு படைகளின் பாரிய ஒத்துழைப்பும் பங்களிப்பும் உள்ளது.

உரிய அதிகாரிகளை அழைத்து தினமும் கலந்துரையாடல்களை நடத்தி ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்கள் உலகில் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாகவுள்ளது.

கொவிட் 19 வைரஸ் என்பது உலகளாவிய தொற்று நோயாகும். உலகிற்கு இந்த வைரஸ் புதிதானதாகும். ஆராய்ச்சிகள், அதுதொடர்பிலான செயற்பாடுகளிலும் ஆரம்ப நிலையிலிருந்து தற்போது மிகவும் வளர்ச்சிகண்டுள்ளது.

இலங்கையில் முதல் நோயாளி கண்டறியப்பட்டது முதல் பல தீர்மானங்களை அரசாங்கம் எடுத்ததுடன், முழு நாட்டையும் முடக்கினோம். இன்று நாம் அவ்வாறு முழு நாட்டையும் முடக்க முடியாது. 

இந்தச் செயல்பாட்டில் அனுபவம் வாய்ந்தவர்களாக சுகாதாரத்துறை மற்றும் தொற்றுநோய் பிரிவு உட்பட துறைசார் ஏனையவர்கள் உயரிய அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர். துறைசார் நிபுணர்கள் தொற்று நோய் பிரவில் அனுவபம் வாய்ந்த ஆலோசகர்கள் உள்ளனர். அவர்களின் ஆலோசனைகளின் பிரகாரம்தான் அரசாங்கம் செயற்படுகிறது. 

மாறாக அரசியல்வாதிகளால் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படுவதில்லை. அவ்வப்போது இது தொடர்பிலான உலகளாவிய மாற்றங்களின் அடிப்படையில்தான் ஆலோசகர்கள் எமக்கு ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

அபிவிருத்திக்கு பெயர் போன நாடுகள் கூட திக்குமுக்காடும் நிலையில் இந்த அனுவபம் வாய்ந்த நிபுணர்கள் எமக்கு மிகவும் பயனுறுதி வாய்ந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

மருத்துவச் சங்கத்தின் கோரிக்கைபடி நாட்டை முடக்குவது நல்லதென கூறி வருகின்றனர். கொவிட்-19 வைரஸ் சமூக பரவல் அடைந்துள்ளதாக மருத்துவச் சங்கம் கூறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். மருத்துவச் சங்கம் அவ்வாறு கூறவில்லை. தேவைகளின் படிதான் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படுமென அவர்கள் கூறியுள்ளனர். 

உலக சுகாதார ஸ்தாபனம் இந்த வைரஸ் சமூக பரவல் அடைவதற்கான நியமங்களை வெளியிட்டுள்ளது. அந்த நியமங்களின் படி தொற்று நோய் பிரிவு சமூகப் பரவல் அடைந்துள்ளதாக கூறினால் மாத்திரமே இதனை ஏற்றுக் கொள்ள முடியும். அதனையே மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. உலக சுகாததார ஸ்தாபனத்தின் ஆலோசனையின் பிரகாரமே நாம் செயற்படுகின்றோம்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment