அரசியலமைப்பினை மறுசீரமைப்பு செய்வதை காட்டிலும் கல்வி மறுசீரமைப்பு எதிர்காலத்தை பலப்படுத்தும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Friday, October 2, 2020

அரசியலமைப்பினை மறுசீரமைப்பு செய்வதை காட்டிலும் கல்வி மறுசீரமைப்பு எதிர்காலத்தை பலப்படுத்தும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்) 

சிறுவர்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் கல்வி கற்கும் விதத்தில் கல்வி முறைமை மறுசீரமைக்கப்படுதல் அவசியமாகும். அரசியலமைப்பினை மறுசீரமைப்பு செய்வதை காட்டிலும் கல்வி மறுசீரமைப்பு எதிர்காலத்தை பலப்படுத்தும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று (02.10.2020) அபேகம பாரம்பரிய அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இடம் பெறும் நிகழ்வுகள் மகிழ்வுக்குரியது. சிறுவர்கள் நாட்டின் சொத்தாகவே கருதப்படுகிறார்கள். எதிர்கால தலைவர்களை சிறந்த முறையில் உருவாக்கும் பொறுப்பு சமூகம், அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுக்கும். 

15 வருடங்களுக்கு அதாவது 2005ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் காணப்பட்ட சூழ்நிலையை இன்றைய சிறுவர்கள் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டார்கள். வரலாற்றினை மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும். 

30 வருட கால யுத்த சூழல் 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உக்கிரமடைந்தன. அனைத்து இன மக்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. 

யுத்த காலத்தில் பலர் அநாதை இல்லங்களில் பிறந்தார்கள். பலர் முகாம்களில் இருந்து இலவச கல்வியை பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறான பின்னணியில் யுத்தம் பலரது உயிர் தியாகங்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்டது. யுத்த கால சூழல் மிகவும் கொடுமையானது. 

நாட்டு மக்கள் அனைவரும் முதலில் தாய் நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் இன, மத, மொழி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாக தாய் நாட்டைக் கருத வேண்டும். 

கொவிட்ட-19 வைரஸ் தாக்கல் கல்வி துறையில் சவாலை ஏற்படுத்தியது. நவீன தொழினுட்ப வசதிகள் ஊடாக நெருக்கடியான சூழலில் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். 

சிறுவர்கள், சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கொவிட்-19 வைரஸ் நெருக்கடியான நிலையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பாடசாலைகள் மீள திறக்கப்பட்டன. 

அனைத்தையும் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து முன்னெடுக்க வேண்டிய தேவை தற்போது காணப்படுகிறது. பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் பாடசாலை சீறுடை துணி உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சிறுவர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் எந்நிலையிலும் முன்னுரிமை வழங்கும். இலவசக் கல்வியை சிறுவர்கள் முறையாக பெற்று சிறந்த பிரஜையாகி நாட்டை பொறுப்பேற்க வேண்டும் என்றார். 

2020ம் ஆண்டு சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் இவ்விழாவின் போது விசேட முத்திரை வெளியிட்டார்.

No comments:

Post a Comment