20 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரட்டை குடியுரிமை விவகாரத்தைப் பயன்படுத்தி பசில் ராஜபக்ஷ மாத்திரமல்ல, சுவிஸர்லாந்திலுள்ள இலங்கை குடியுரிமையைக் கொண்ட புலம்பெயர் புலிகள் கூட பாராளுமன்றத்திற்கு செல்லக் கூடிய அபாயம் உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் அபராதுவ தொகுதியின் அமைப்பாளர் சட்டத்தரணி தாரக நாணயக்கார தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 19 ஆவது திருத்தத்தின் மூலம் குறைக்கப்பட்ட ஜனாதிபதிக்குரிய நிறைவேற்றதிகாரங்கள் 20 இன் மூலம் மீண்டும் கொண்டுவரப்படவுள்ளன. இது பாராளுமன்றத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பாரிய பாதகமாகும்.
தனிநபர் கைகளில் முழு நாட்டையும் ஒப்படைக்கின்ற சர்வாதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இரட்டை குடியுரிமையைக் கொண்டவர்கள் பாராளுமன்றம் செல்லலாம் என்ற ஏற்பாடு 20 இல் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது பசில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்திற்குள் அனுமதிப்பதற்கான மறைமுக முயற்சியாகும்.
எனினும் இவ்வாறான ஏற்பாடு காணப்படுவதால் பசில் ராஜபக்ஷ மாத்திரமல்ல, சுவிஸர்லாந்தில் வாழும் இலங்கை குடியுரிமையைக் கொண்ட புலம்பெயர் புலிகள் கூட பாராளுமன்றத்திற்கு தெரிவாகலாம் என்பதை நினைவுபடுத்துகின்றோம். இவ்வாறு இடம்பெற்றால் அது நாட்டின் இறையான்மையை பாதிக்கும்.
எவ்வாறிருப்பினும் அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் 20 ஐ நிறைவேற்றிக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆளுந்தரப்பிலுள்ள சந்திம வீரக்கொடி போன்ற சிலரது கருத்துக்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மௌனமும் அரசாங்கத்தை இவ்வாறு சந்தேகம் கொள்ள வைத்திருக்கிறது. எனவே தற்போது ரிஷாத் பதியுதீன் போன்றவர்கள் மீது அரசாங்கம் குறிவைக்கிறது என்றார்.
No comments:
Post a Comment