மணிவண்ணனை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப் பெறப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

மணிவண்ணனை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப் பெறப்பட்டது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க உத்தரவிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனு நேற்று (13) மீளப்பெறப்பட்டது.

இதன்போது “பிரதிவாதி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மாநகர சபை உறுப்புரிமை வழங்கி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் இந்த மனுவின் ஊடாக நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அதனால் வழக்குச் செலவின்றி மனுவை மீளப்பெற மனுதாரர் முடிவு செய்துள்ளார்” என்று மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, “மணிவண்ணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விடயத்தை நான் அறியவில்லை. ஆனால் மனுதாரரின் விண்ணப்பத்துக்கு ஆட்சேபனையில்லை” என்று மணிவண்ணன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார். அதனால் மனுதாரரின் விண்ணப்பத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு அனுமதியளித்தது.

யாழ்ப்பாண மாநகர சபை எல்லையில் வதியும் வாக்காளர் ஒருவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட வேண்டுமென மனுதாரர் கோரியிருந்தார்.

மனுதாரர் கோரிய இடைக்கால நிவாரணங்களில் ஒன்றான, மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க உறுப்பினர் வி.மணிவண்ணனுக்கு தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கியது.

இந்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே அதனை மனுதாரர் மீளப்பெற்றார்.

கந்தர்மடம் நிருபர்

No comments:

Post a Comment